கீரை பிரியாணி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

அரைக்கீரை / சிறு கீரை - ஒரு கட்டு

பாசுமதி அரிசி - ஒன்றரை கப்

பச்சை மிளகாய் - 2

வெங்காயம் - ஒன்று

இஞ்சி, பூண்டு

சாம்பார் தூள் - ஒரு தேக்கரண்டி

பிரியாணி மசாலாத் தூள் - ஒரு தேக்கரண்டி

மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி

வெள்ளை கொண்டைக்கடலை - ஒரு கப்

தக்காளி - ஒன்று

புளி - 2 கொட்டை அளவு

கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை, புதினா

உப்பு

தாளிக்க:

எண்ணெய் - தேவையான அளவு

பட்டை, லவங்கம், ஏலக்காய், மராத்தி மொக்கு

செய்முறை:

அரிசியைக் களைந்து ஊற வைக்கவும். மிக்ஸியில் வெங்காயத்துடன் பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து லேசாக அரைத்துக் கொள்ளவும். (நைசாக அரைக்க வேண்டாம்).

கீரையை இளம் தண்டுடன் சுத்தம் செய்து, உப்பு மற்றும் புளி சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து வேக வைத்து ஆறவிடவும். (முக்கால் பதம் வெந்தால் போதுமானது). கீரை ஆறியதும் அரைத்துக் கொள்ளவும்.

கொண்டைக்கடலையை ஊற வைத்து, பிறகு வேக வைத்து தண்ணீர் இல்லாமல் வடித்து வைக்கவும்.

குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய், மராத்தி மொக்கு தாளித்து, கறிவேப்பிலை மற்றும் வெங்காயக் கலவையைச் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளியை அரைத்து சேர்க்கவும்.

தக்காளி நன்றாக வதங்கியதும் அரைத்து வைத்துள்ள கீரை விழுதைச் சேர்த்து லேசாக வதக்கவும்.

கீரை வதங்கியதும் தூள் வகைகள் சேர்த்து எண்ணெய் பிரிய வதக்கவும்.

பிறகு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு மற்றும் கொண்டைக்கடலையைச் சேர்த்துக் கொதிக்கவிடவும்.

நன்றாக கொதி வந்ததும் அரிசியை தண்ணீர் இல்லாமல் வடித்துச் சேர்க்கவும். மீண்டும் கொதிக்கத் துவங்கியதும் கொத்தமல்லித் தழை மற்றும் புதினா தூவி, குக்கரை மூடி 10 - 15 நிமிடங்கள் வரை குறைந்த தீயில் வைத்து வேகவிட்டு இறக்கவும்.

சுவையான கீரை பிரியாணி தயார். ரைத்தாவுடன் பரிமாறவும்.

குறிப்புகள்:

வெங்காயம், தக்காளியை அரைக்கும் போது தண்ணீர் சேர்க்கக் கூடாது. கீரையை அரைக்க அதன் மீது தெளித்த தண்ணீரே போதுமானது. சாம்பார் தூள் இல்லாதவர்கள் அரை தேக்கரண்டி மிளகாய் தூளும், அரை தேக்கரண்டி தனியா தூளும் பயன்படுத்தலாம். காரம் குறைவாகவே இருக்கும். விரும்பினால் ஒன்று அல்லது இரண்டு பச்சை மிளகாய் சேர்க்கலாம். கீரை சாப்பிட அடம் பிடிக்கும் பிள்ளைகள் கூட விரும்பி சாப்பிடுவார்கள். கொண்டைக்கடலைக்கு பதிலாக வேக வைத்த பச்சை வேர்க்கடலை அல்லது பட்டாணி, உருளைக்கிழங்கு போன்றவற்றையும் சேர்க்கலாம். இவை எதுவும் சேர்க்காமல் வெறும் கீரையை மட்டுமே சேர்த்து இந்த பிரியாணியைச் செய்யலாம்.