காளான் பிரியாணி (2)
தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி - 2 கப்,
பட்டன் காளான் - 20,
பெரிய வெங்காயம் - 2,
இஞ்சி - 1 துண்டு,
பூண்டு - 5 பல்,
தக்காளி - 2,
தயிர் - 1/2 கப்,
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி,
தனியா தூள் - 1 மேசைக்கரண்டி,
கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி,
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி,
பட்டை - சிறிது,
கிராம்பு - 4,
சீரகத்தூள் - 1/2 தேக்கரண்டி,
ஏலக்காய் - 2,
புதினா - 1/4 கட்டு,
கொத்தமல்லி தழை - 1/4 கட்டு,
பிரிஞ்சி இலை - சிறிது,
எலுமிச்சம் பழம் - 1,
மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி,
எண்ணெய் - 2 ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
அரிசியைக் கழுவி அரைமணி நேரம் ஊற வைக்கவும்.
காளான்களைக் கழுவி, நான்காக வெட்டி வைக்கவும்.
பூண்டு, இஞ்சியை அரைத்து வைக்கவும்.
வெங்காயத்தை சன்னமாக நறுக்கி வைக்கவும்.
கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி வைக்கவும்.
தக்காளியை வெந்நீரில் போட்டு, தோலுரித்து அரைத்து வைக்கவும்.
பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை, சிறிது உப்பு சேர்த்து, அரிசியை உதிராக வேக வைத்து, வடித்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெயை காய வைத்து, காய்ந்தவுடன் நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
மிளகாய் தூள், தனியா தூள், மிளகு தூள், சீரகத்தூள், மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, அத்துடன் அரைத்த தக்காளியையும் சேர்க்கவும்.
கலக்கிய தயிர், கரம் மசாலா, கொத்தமல்லி, புதினா, காளான் சேர்த்து 2 நிமிடம் வதக்கி இறக்கவும்.
ஒரு பெரிய பாத்திரத்தில் சாதத்தை ஒரு அடுக்காகவும் (layer), வதக்கிய மசாலா ஒரு அடுக்காகவும் மாற்றி மாற்றி போட்டு, மேலே சாதத்தால் முடிக்கவும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதன் மேல் பிரியாணி பாத்திரத்தை இறுக்கமாக மூடி, மேலே ஒரு பாத்திரத்தில் வெந்நீர் வைத்தால் தம் ஆகிவிடும்.
1/4 மணி நேரம் தம்மானதும் இறக்கவும்.