காலிஃப்ளவர் பிரியாணி செய்முறை
தேவையான பொருட்கள்:
சீரக சம்பா அரிசி - 1/2 கிலோ,
காலிஃபிளவர் - 1,
பெரிய வெங்காயம் - 2,
பச்சை மிளகாய் - 6,
தக்காளி - 3,
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி,
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி,
எலுமிச்சம் பழம் - 1,
இஞ்சி - 1 அங்குல துண்டு,
பூண்டு - 10 பல்,
பட்டை - சிறிது,
கிராம்பு - 2,
ஏலக்காய் - 2,
சோம்பு - 1/2 தேக்கரண்டி,
கொத்தமல்லி - 1 கட்டு,
உப்பு - தேவையான அளவு,
நெய் - 50 கிராம்.
செய்முறை:
அரிசியைக் கழுவி அரைமணி நேரம் ஊற வைக்கவும்.
ஊற வைத்த அரிசியை உதிராக வடித்து உப்பு, 1 ஸ்பூன் நெய் கலந்து ஆற வைக்கவும்.
வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயையும் நீளமாக நறுக்கி வைக்கவும்.
கொத்தமல்லியை பொடியாக நறுக்கவும்.
காலிஃப்ளவரை சுத்தம் செய்து, பெரிய துண்டுகளாக நறுக்கி, கொதிக்கும் நீரில் போட்டு சுத்தம் செய்து வைக்கவும்.
நறுக்கிய காலிஃப்ளவரை சிறிது உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து, 1/4 டம்ளர் தண்ணீரில் வேக வைக்கவும்.
பட்டை, கிராம்பு, ஏலக்காய், இஞ்சியி தட்டி வைக்கவும், பூண்டை உரித்து வைக்கவும்.
பெரிய பாத்திரத்தில் நெய்யை விட்டு காய்ந்தவுடன் தட்டி வைத்த பட்டை, கிராம்பு, ஏலக்காய், இஞ்சி சேர்க்கவும்.
பொரிந்தவுடன் நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியவுடன், பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து வதக்கவும்.
சிறிது நேரம் வதக்கிய பின், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
வதக்கியபின், 1/4 டம்ளர் தண்ணீர் சேர்த்து மசாலா நன்கு சுண்டியதும் வேக வைத்த காலிஃப்ளவர் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
வதங்கியபின், ஆறவைத்த சாதம், எலுமிச்சம் பழசாறு சேர்த்து சாதம் உடையாமல் நன்கு கிளறி 5 நிமிடம் தம்மில் வைத்து இறக்கவும்.