கறி பிரியாணி
தேவையான பொருட்கள்:
பிரியாணி அரிசி - ஒரு படி
கறி - 2 கிலோ
பெரிய வெங்காயம் - முக்கால் கிலோ
தக்காளி - 300 கிராம்
பூண்டு - 150 கிராம்
பச்சைமிளகாய் - 75 கிராம்
புதினா சிறிய கட்டு - 2
மல்லிக்கீரை - 2
எலுமிச்சம் பழம் - 2
முந்திரிப்பருப்பு - 50 கிராம்
இஞ்சி - 100 கிராம்
தயிர் - 3 ஆழாக்கு
பட்டை - 7 துண்டு
ஏலக்காய் - 15
கிராம்பு - 15
நெய் - இரண்டரை ஆழாக்கு அல்லது டால்டா
பால் - 2 ஆழாக்கு (பசும்பால் அல்லது தேங்காய் பால்)
கேசரி பவுடர் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
அலுமினியம் அல்லது உள்பக்கம் ஈயம் பூசப்பட்ட பித்தளைப் பாத்திரம் ஒன்றை எரியும் அடுப்பில் வைத்து ஈரத்தை உலர்த்தவும், ஈரம் உலர்ந்ததும் நெய்யைப் பாத்திரத்தில் போடவும்.
நெய் உருகி, சூடானதும் அதில் சிறிது தண்ணீரைத் தெளித்துப் பார்க்கவும். 'சுர்' என்று சப்தம் வந்ததும் ஏலம், பட்டை, கிராம்பு ஆகியவற்றைப் பாத்திரத்தில் போடவும்.
அதன்பின் நறுக்கப்பட்ட வெங்காயத்தைப் போடவும். வெங்காயம் வெந்து மணம் வந்ததும் அரைத்த இஞ்சியைப் போடவும். அதன்பின் இவற்றை அடி பிடித்துவிடாமல் கிளறிக்கொண்டே இருக்கவும். வெங்காயம் சிவந்ததும், அரைத்த பூண்டைப் போடவும்.
அதன்பின் கறியை நன்கு கழுவி தண்ணீர் இல்லாமல் வடித்து பாத்திரத்தில் போடவும். அதைத் தொடர்ந்து புதினா, தேவையானால் சிறிது மிளகாய்த்தூள், பச்சைமிளகாய், உப்பு ஆகியவற்றை பாத்திரத்தில் போட்டுக் கிளறி ஆவி வெளியே போகாமல் மூடி விடவும்.
பிறகு அரிசியை சுத்தம் செய்து கலைந்து தண்ணீரில் ஊறப் போடவும். மற்றொரு அடுப்பில் இரண்டரைப்படி தண்ணீர் ஊற்றி உலை போடவும். உலை நன்கு கொதித்ததும் ஒரு பிடி உப்பை உலையில் கரைத்து ஊற்றவும்.
அதன் பின் அரிசியை உலையில் கொட்டவும். பாத்திரத்தின் வாயை மூட வேண்டும். இரண்டு நிமிடங்களுக்கு ஒரு முறை கரண்டியால் அரிசியை அள்ளி வேக்காட்டைப் பார்த்துக் கொண்டே இருக்கவும்.
இதற்கிடையில் கறி, அடி பிடித்துவிடாமல் கவனித்துக் கிளறிக் கொண்டே இருக்கவும்.
சோறு அரை வேக்காடு ஆனதும் தண்ணீர் இல்லாமல் வடித்து வைத்துக் கொண்டு முந்திரிப்பருப்பை அரைத்து பாலில் கரைத்து, பாலையும், எலுமிச்சம் பழம் சாற்றையும் குருமாவில் ஊற்றிக் கிளறி குருமாவில் உப்பைப் பார்க்கவும். உப்பு சற்று சுள்ளென்று இருக்க வேண்டும்.
அதன்பின் வடித்த சோற்றை மேலே தெளித்து, கீழ் நெருப்பைப் பிரித்து மூடி, மூடிமேல் தீக்கங்குகளைப் போட்டு நன்கு தீ வளர்த்து தம்மில் விடவும்.
10 நிமிடம் கழித்து திறந்து பார்த்து கிளறிவிட்டு அரிசி இல்லாமல் சோறு வெந்துவிட்டதா என கவனித்து இன்னும் சற்று நேரம் தம்மில் வைத்து இறக்கவும்.