கத்தரிக்காய் பிரியாணி
தேவையான பொருட்கள்:
சின்ன கத்தரிக்காய் - 8 - 10
பெரிய வெங்காயம் - ஒன்று
பாசுமதி அரிசி - 2 கப்
தேங்காய்ப் பால் - ஒரு கப்
எலுமிச்சை பழம் - பாதி
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு இணுக்கு
மசாலா விழுது செய்ய:
பச்சை மிளகாய் - 5 (காரத்திற்கேற்ப)
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 6 (சிறிய பற்கள்)
சோம்பு - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி
தாளிக்க:
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
நெய் - சிறிது
பட்டை, கிராம்பு, ப்ரிஞ்சி இலை, ஏலக்காய்
மராத்தி மொட்டு - ஒன்று (விருப்பப்பட்டால்)
புதினா, கொத்தமல்லித் தழை - இரண்டு கைப்பிடி
செய்முறை:
கத்தரிக்காயில் உள்ள காம்பை நீக்கிவிட்டு, நான்காக நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும். (தண்ணீரில் போடாமல் வைத்திருந்தால் கத்தரிக்காயின் நிறம் மாறிவிடும்). அரிசியைக் களைந்து தண்ணீர் ஊற்றி 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். மசாலா விழுது செய்ய கொடுத்துள்ளவற்றில் கரம் மசாலா தூள் தவிர மீதமுள்ளவற்றை ஒரு துளி எண்ணெய் விட்டு லேசாக வதக்கி எடுத்து ஆற வைக்கவும்.
ஆறியதும் அதனுடன் கரம் மசாலா தூள் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு விழுதாக அரைத்து வைக்கவும்.
பாத்திரத்தில் (அல்லது) குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் விட்டு சூடானதும், தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை ஒவ்வொன்றாகப் போட்டு லேசாக வறுக்கவும்.
அதனுடன் மெல்லியதாக நீளவாட்டில் நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலைச் சேர்த்து, வெங்காயம் லேசாக நிறம் மாறும் வரை வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் அரைத்து வைத்துள்ள மசாலா விழுதைச் சேர்த்து, சில நிமிடங்கள் நன்கு வதக்கவும். பிறகு கத்தரிக்காயைப் போட்டு சில நிமிடங்கள் வதக்கி, பொடியாக நறுக்கிய புதினா மற்றும் கொத்தமல்லித் தழைச் சேர்த்து வதக்கவும்.
பிறகு தேவையான அளவு உப்புச் சேர்த்து, தேங்காய்ப் பால் மற்றும் தண்ணீர் கலந்து சேர்க்கவும். (1:2 என்ற விகிதத்தில் 2 கப் அரிசிக்கு, ஒரு கப் தேங்காய் பால், 3 கப் தண்ணீர் சேர்க்கவும்).
தண்ணீர் நன்கு கொதிக்கத் தொடங்கியதும் ஊறவைத்த அரிசியைத் தண்ணீரை வடித்துவிட்டுச் சேர்க்கவும். பிறகு எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொதிக்கவிடவும்.
மீண்டும் கொதி வந்ததும் மூடி போட்டு குறைந்த தீயில் வைக்கவும். 20 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்துவிடவும். (அல்லது) குக்கரில் செய்தால் கொதி வந்ததும் மூடி வைத்து, ஆவி வந்ததும் வெய்ட் போட்டு 2 விசில் வந்ததும் இறக்கவும். பிறகு ஆவி அடங்கியதும் திறந்து ஃபோர்க் (அல்லது) முள்கரண்டியால் மெதுவாக சாதம் உடையாமல் கிளறிவிடவும்.
கத்தரிக்காய் பிரியாணி தயார். தயிர் அல்லது தயிர் பச்சடியுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.