இறால் பிரியாணி (4)
தேவையான பொருட்கள்:
பெரிய இறால் - 3/4 கிலோ
பாஸ்மதி அரிசி - 4 டம்ளர்
வெங்காயம் - 4
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
தயிர் - 2 தேக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது - 3 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 2 1/2 தேக்கரண்டி
மிளகு தூள் - அரை தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - 3 தேக்கரண்டி
தக்காளி சாஸ் - அரை தேக்கரண்டி
பட்டை(விரல் அளவு) - 3
கிராம்பு - 3
ஏலக்காய் - 4
எலுமிச்சை பழம் - ஒன்று
மல்லி, புதினா தழை - தலா அரை கட்டு
எண்ணெய் - 100 மி.லி
நெய் - 3 தேக்கரண்டி
செய்முறை:
இறாலை நன்கு சுத்தம் செய்து விட்டு மஞ்சள் தூள் போட்டு நன்கு கழுவி எடுத்துக் கொள்ளவும். கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
இறாலுடன் அரை தேக்கரண்டி மிளகாய் தூள், அரை தேக்கரண்டி இஞ்சி, பூண்டு விழுது, தேவையான அளவு உப்பு, மிளகு தூள், சாஸ் போட்டு நன்கு பிரட்டி வைத்து கொள்ளவும். வெங்காயம் தக்காளியையும் நறுக்கி வைத்து கொள்ளவும்.
ஒரு அகன்ற வாணலியில் 60 மி.லி எண்ணெய் மற்றும் ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு வெடித்ததும் நறுக்கின வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் நிறம் மாறியதும் இஞ்சி, பூண்டு விழுது போட்டு நன்கு இரண்டு நிமிடம் வதக்கவும். பின்பு நறுக்கின தக்காளி, பச்சை மிளகாய் போட்டு நன்கு வதக்கவும்.
அதற்குள் மற்றொரு அடுப்பில் வாணலியை வைத்து 3 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி பிரட்டி வைத்திருக்கும் இறாலை போட்டு தண்ணீர் சுண்ட வறுத்து வைக்கவும்.
வெங்காயம் தக்காளி வதங்கியதும், இரண்டு தேக்கரண்டி கரம் மசாலா தூள், மற்ற மசாலாதூள் வகைகள், தயிர், மல்லி, புதினா தழை ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறி தேவையான அளவு உப்பு போட்டு ஒரு மூடி போட்டு மிதமான தீயில் வைத்து பத்து நிமிடம் வதங்க விடவும்.
பிறகு வறுத்து வைத்திருக்கும் இறாலை அதில் சேர்த்து பிரட்டி ஒரு நிமிடம் வைக்கவும். அதன் பிறகு எண்ணெய் மிதந்து வரும் அப்போது அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
அரிசியை நன்கு மூன்று முறை கழுவி விட்டு பத்து நிமிடம் ஊற வைக்கவும்.
ஒரு பெரிய சட்டியில் ஆறு டம்ளர் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதி வந்ததும், ஊற வைத்த அரிசியில் தண்ணீரை நன்கு வடிகட்டி விட்டு போட்டு அதற்கு தேவையான அளவு உப்பு போட்டு வேக விடவும். எலுமிச்சைச்சாறை ஊற்றவும்.
தண்ணீர் சுண்டும் நேரம் மசாலாவை ஊற்றி அடி சாதத்தை மேலே மேலே போட்டு மீதியுள்ள கரம் மசாலாவை பரவலாக தூவி விரும்பினால் ஆரஞ்சு கலர் சிலதுளிகள் ஓரிடத்தில் போடவும்.
அடுப்பில் தம் போடும் தட்டை வைத்து மூடியில் பேப்பர் போட்டு மூடி மேலே வெயிட் வைத்து அடுப்பை குறைந்த தீயில் வைத்து 15 நிமிடம் அப்படியே விடவும். அதன் பிறகு மூடியை திறந்து கிளறி விட்டு அடுப்பை அணைக்கவும்.
சுவையான இறால் பிரியாணி ரெடி.