இறால் பிரியாணி (1)
தேவையான பொருட்கள்:
அரிசி - ஒரு கப்
இறால் - அரை கப்
பெரிய வெங்காயம் - 3
தக்காளி - 4 (அ) 5
பச்சை மிளகாய் - 3
மிளகாய்த் தூள் - அரை தேக்கரண்டி
எண்ணெய் - கால் கப்
இஞ்சி, பூண்டு விழுது - 3 தேக்கரண்டி
எலுமிச்சம் பழம் - ஒன்று
பிரியாணி மசாலா - 2 தேக்கரண்டி
சீரக சோம்புத் தூள் - ஒரு மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
ஆரஞ்ச் நிற கேசரி பவுடர் - ஒரு பின்ச்
தயிர் - அரை கப்
பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா இரண்டு
செய்முறை:
முதலில் அரிசியை 15 நிமிடம் ஊற வைத்து களைந்து தண்ணீரை வடித்து வைத்து கொள்ளவும். எலுமிச்சையை சாறு எடுத்துக் கொள்ளவும். இறாலுடன் பாதி தயிர், பாதி எலுமிச்சை சாறு, ஒரு தேக்கரண்டி இஞ்சி, பூண்டு விழுது, மஞ்சள் தூள், சிறிது உப்பு சேர்த்து ஊற வைத்து விடவும். வெங்காயம், தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு அகலமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காயை போட்டு தாளிக்கவும். பின் முக்கால் பங்கு வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து 2 நிமிடம் கழித்து, தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.
பின் ஊற வைத்த இறாலை சேர்த்து அதனுடன் பிரியாணி மசாலா, சீரக சோம்புத் தூள், மீதமிருக்கும் தயிர், புதினா, மல்லித்தழை,, தேவையான அளவு உப்பு சேர்த்து 7 நிமிடத்திற்கு சிம்மில் மூடி போட்டு வைக்கவும்.
ஒரு கப் அரிசிக்கு ஒன்றே முக்கால் கப் என்ற அளவிற்கு தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க விடவும்.
தண்ணீர் நன்றாக கொதித்ததும் களைந்து வைத்துள்ள அரிசியை போட்டு, வெளியே ஆவி வராதவாறு நன்றாக மூடி வைக்கவும். தண்ணீர் போதவில்லையென்றால் சிறிது வெந்நீர் சேர்த்து கொள்ளவும்.
சாதம் வெந்து தண்ணீர் சல சலவென்று இருக்கும் பொழுது பாதி எலுமிச்சை சாற்றில் கேசரி பவுடர் சேர்த்து ஊற்றவும்.
எலுமிச்சை சாறு ஊற்றிய உடன் ஒரு அலுமினிய பாயில் பேப்பர் கொண்டு நன்றாக ஆவி போகாதவாறு சாதத்தை மூடி, பாத்திரத்தையும் மூடி அடுப்பை அணைத்து விடவும்.
20 நிமிடம் கழித்து பேப்பரை எடுத்தால் சாதம் உதிரியாக வெந்து இருக்கும். மீதி இருக்கும் வெங்காயத்தை நன்றாக பொரித்து பிரியாணி மீது தூவி, சிறிது மல்லித் தழையும் தூவவும். இப்பொழுது சுவையான இறால் பிரியாணி தயார். விரும்பினால் பரிமாறும் பொழுது சிறிது நெய் தெளித்து கொள்ளலாம்.
குறிப்புகள்:
குக்கரில் இறால் பிரியாணியை செய்வதற்கு மேலே உள்ள 5 வது ஸ்டெப் வரை செய்து விட்டு, குக்கரில் அரிசியை போட்டு ஒரு விசில் வர விட்டு இன்னொரு விசில் வரும் நேரத்தில் அடுப்பை அணைத்து விடவும். குக்கரை நன்றாக ஆற விட்டு ஆவி அடங்கியதும் திறக்கவும். அப்பொழுது தான் சாதம் உதிரியாக இருக்கும். ஆவி அடங்கும் முன் திறந்தால் சாதம் தண்ணீர் விட்டிருக்கும். இந்த சாதத்தில் கேசரி பவுடர் கலந்த எலுமிச்சை சாற்றை பரவலாக ஊற்றி குக்கரின் ஓரத்திலிருந்து சாதம் உடையாதவாறு மேலிருந்து கீழாக பிரட்டவும். இரண்டு மூன்று முறை குலுக்கி விடவும். பின் 9 வது ஸ்டெப்பிலுள்ளது போல் பரிமாறவும்.