இறால் பிரியாணி

on on on on off 3 - Great!
4 நட்சத்திரங்கள் - 3 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

இறால் - கால் கிலோ

பெரிய வெங்காயம் - 2

பாஸ்மதி அரிசி - ஒன்றரை கப்

தக்காளி - ஒன்று

கறிவேப்பிலை - ஒரு கொத்து

கொத்தமல்லித் தழை - ஒரு கொத்து

புதினா - 2 கொத்து

இஞ்சி, பூண்டு விழுது - ஒன்றரை மேசைக்கரண்டி

எண்ணெய் - கால் கப்

ஏலக்காய் - 2

சோம்பு - கால் தேக்கரண்டி

பட்டை - ஒன்று

கிராம்பு - 3

பிரிஞ்சி இலை - பாதி

கல் உப்பு - 2 தேக்கரண்டி

மல்லித் தூள் - ஒன்றரை மேசைக்கரண்டி

மிளகாய் தூள் - ஒரு மேசைக்கரண்டி

நெய் - 2 தேக்கரண்டி

செய்முறை:

பெரிய வெங்காயத்தை தோல் உரித்து நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். இறாலின் தலையை நீக்கி விட்டு தோலுரித்து சுத்தம் செய்து கொள்ளவும். கொத்தமல்லித் தழையை ஆய்ந்து வைக்கவும். அரிசியை களைந்து விட்டு அரை மணி நேரம் ஊற வைக்கவும். மற்ற தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.

குக்கரில் எண்ணெய் மற்றும் ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, சோம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை, கறிவேப்பிலை, புதினா ஆகியவற்றை போட்டு தாளிக்கவும்.

பிறகு அதில் வெங்காயத்தை போட்டு 3 நிமிடங்கள் நன்கு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

அதனுடன் தக்காளி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து ஒரு நிமிடத்திற்கு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

பச்சை வாசனை போனதும் அதில் சுத்தம் செய்த இறாலை போட்டு சுருளும் வரை 2 நிமிடங்கள் வதக்கவும்.

அதனுடன் மிளகாய் தூள், மல்லித் தூள், உப்பு போடவும். தூள் வாசனை போகும் வரை 2 நிமிடங்கள் நன்கு பிரட்டி விடவும்.

அதில் 2 கப் தண்ணீர் ஊற்றி 2 நிமிடங்கள் கிளறி விட்டு நன்கு கொதிக்க விடவும்..

மசாலா கலவை நன்கு கொதித்து பொங்கி வரும் போது அரிசியை போடவும்

அரிசியை போட்ட பிறகு கிளறிவிட்டு குக்கரை மூடி வெய்ட் போட்டு 8 நிமிடங்கள் வேக விட்டு, வெந்ததும் இறக்கி விடவும்.

பின்னர் குக்கரை திறந்து ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி கிளறிவிட்டு, கொத்தமல்லித் தழையை தூவி கிளறி விடவும்.

சுவையான இறால் பிரியாணி தயார். நெய்யில் வறுத்த முந்திரி தூவி பரிமாறவும்.

அறுசுவை நேயர்களுக்காக இந்தக் குறிப்பினை வழங்கி செய்து காட்டியவர் திருமதி. சுமதி திருநாவுக்கரசு. சமையல் கலையில் நீண்ட அனுபவமும், நிறைய ஆர்வமும் கொண்ட இல்லத்தரசி இவர். ஏராளமான சமையல் போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் பல பெற்றுள்ளார்.

குறிப்புகள்: