அவரெக்காளு பிரியாணி

on on on off off 2 - Good!
3 நட்சத்திரங்கள் - 2 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

அவரெக்காளு (பச்சை மொச்சை) - அரை கப்

பாசுமதி அரிசி - ஒரு கப்

உருளைக்கிழங்கு - 2 (சிறியது)

வெங்காயம் - ஒன்று (பெரியது)

தக்காளி - ஒன்று (பெரியது)

உப்பு - தேவையான அளவு

தயிர் - 2 மேசைக்கரண்டி

தேங்காய் பால் - ஒரு கப் (விரும்பினால்)

பிரியாணி மசாலா - அரை தேக்கரண்டி

கொத்தமல்லித் தழை, புதினா - சிறிது

வறுத்து பொடிக்க:

பட்டை - ஒரு துண்டு

லவங்கம் - 3

மிளகாய் வற்றல் - 3

தனியா - ஒரு தேக்கரண்டி

சீரகம் - ஒரு தேக்கரண்டி

கடலைப்பருப்பு - ஒன்றரை தேக்கரண்டி

பூண்டு - 5 பல்

இஞ்சி - ஒரு துண்டு

பச்சை மிளகாய் - 3

தாளிக்க:

பிரிஞ்சி இலை - ஒன்று

ஏலக்காய் - 3

அன்னாசிப்பூ - சிறு துண்டு

நெய், எண்ணெய் - 3 மேசைக்கரண்டி

செய்முறை:

அரிசியை சுத்தம் செய்து ஊற வைக்கவும். மொச்சையை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். வெங்காயத்தை நீளமாகவும், உருளைக்கிழங்கு மற்றும் தக்காளியை சிறு துண்டுகளாகவும் நறுக்கி வைக்கவும்.

வெறும் வாணலியில் சீரகம், பட்டை, லவங்கம், மிளகாய் வற்றல், தனியா மற்றும் கடலைப்பருப்பை சிவக்க வறுத்தெடுத்து ஆறவிடவும்.

ஆறியதும் மிக்ஸியில் போட்டு பொடியாக்கவும். கடைசியாக பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.

பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பிரிஞ்சி இலை, ஏலக்காய் மற்றும் அன்னாசிப்பூ சேர்த்து தாளித்து, வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.

தக்காளி குழைய வதங்கியதும் வறுத்து பொடி செய்த மசாலா, பிரியாணி மசாலா மற்றும் உப்புச் சேர்த்து பிரட்டவும்.

அதனுடன் சுத்தம் செய்து வைத்துள்ள மொச்சையைச் சேர்த்து, மசாலா மொச்சையுடன் சேரும்படி நன்கு பிரட்டிவிட்டு, தயிர் சேர்த்து எண்ணெய் பிரிய வதக்கவும்.

எண்ணெய் பிரிந்து வந்ததும் தேங்காய் பால் சேர்ப்பதாக இருந்தால் ஒரு கப் தேங்காய் பால் + ஒரு கப் நீர் ஊற்றவும். (அல்லது) 2 கப் நீர் மட்டும் ஊற்றி கொத்தமல்லித் தழை மற்றும் புதினா சேர்த்து கொதிக்கவிடவும். கொதி வந்ததும் அரிசியை நீர் இல்லாமல் வடித்துவிட்டு சேர்த்து மீண்டும் ஒரு கொதி வந்ததும் மூடி போட்டு சிறு தீயில் வைத்து வேகவிடவும். (நான் கொத்தமல்லித் தழை மற்றும் புதினா சேர்க்கவில்லை).

முக்கால் பதம் வெந்ததும் தம்மில் போட்டு 15 நிமிடங்கள் வைத்து எடுத்தால் சுவையான அவரெக்காளு பிரியாணி தயார்.

குறிப்புகள்:

உருளைக்கிழங்குடன் கேரட், பீன்ஸ் போன்ற காய்களும் சேர்க்கலாம். தண்ணீரின் அளவு நீங்கள் பயன்படுத்தும் அரிசிக்கு ஏற்ப சேர்க்கவும். கொத்தமல்லித் தழை, புதினாவை தாளிக்கும் போதும் சேர்க்கலாம். வாசம் அருமையாக இருக்கும்.

இஞ்சி, பூண்டு சேர்த்த பிறகு அதிகமாக அரைக்க வேண்டாம். வறுத்த மசாலா நன்றாக பொடியானதும் இவற்றை சேர்த்து லேசாக ஒரு சுற்று அரைத்து எடுத்தாலே போதும்.