வெண்டைக்காய் மோர் குழம்பு
தேவையான பொருட்கள்:
மோர் - 2 1/4 கப்
வெண்டைக்காய் - 7
பச்சை மிளகாய் - 6
பொட்டுக்கடலை - 1 1/2 மேசைக்கரண்டி
தனியா - 1 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - 2 கொத்து
சீரகம் - 1 தேக்கரண்டி
தேங்காய் துருவல் - 1/4 கப்
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
கடுகு - 3/4 தேக்கரண்டி
எண்ணெய் - 4 தேக்கரண்டி
கல் உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வெண்டைக்காயைச் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கிய வெண்டைக்காயைப் போட்டு சிம்மில் வைத்து 2 நிமிடங்கள் வதக்கவும். பிறகு 2 நிமிடங்கள் மூடி வைக்கவும். சிறிது நேரம் கழித்து திறந்து கிளறிவிட்டு மீண்டும் 3 நிமிடங்கள் மூடி வைத்திருந்து, வெண்டைக்காய் நன்கு வதங்கியதும் தனியாக எடுத்து வைக்கவும்.
மிக்ஸியில் பச்சை மிளகாய், தேங்காய் துருவல், மஞ்சள் தூள், உப்பு, தனியா, பொட்டுக்கடலை, சீரகம் ஆகியவற்றைப் போட்டு 2 மேசைக்கரண்டி தண்ணீர் ஊற்றி அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் தயிரை ஊற்றி அடுப்பில் வைத்து, அதில் அரைத்த விழுதைச் சேர்த்து கலந்து கொள்ளவும்.
2 நிமிடங்கள் கழித்து வதக்கி வைத்துள்ள வெண்டைக்காயைப் போட்டு, கறிவேப்பிலையைத் தூவி கொதிக்கவிடவும்.
நன்கு கொதித்து பொங்கி வரும் வரை கொதிக்கவிட்டு இறக்கவும்.
வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி, கடுகு தாளித்து குழம்பில் சேர்த்து பரிமாறவும்.