வெண்டைக்காய் புளிக்குழம்பு (2)
தேவையான பொருட்கள்:
வெண்டைக்காய் - 4
முருங்கைக்காய் - 1
தக்காளி - 2
தேங்காய் - அரை மூடி (சிறியது)
புளி - எலுமிச்சை அளவு
வடகம் - 1 தேக்கரண்டி
பூண்டு - 10
பெரிய வெங்காயம் - 2 (நடுத்தர அளவில்)
மிளகாய்த் தூள் - 1 மேசைக்கரண்டி
மல்லித்தூள் - 1/2 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - இரண்டு கொத்து
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வடகம் வீட்டிலேயே தயாரித்துக் கொள்ளலாம். இல்லையெனில் கடைகளில் கிடைப்பதை வாங்கிப் பயன்படுத்தலாம்.
முருங்கைக்காய், வெண்டைக்காய்களை நறுக்கிக் கொள்ளவும்.
வெங்காயத்தையும், பூண்டையும் அம்மியில் வைத்து தட்டி எடுத்துக் கொள்ளவும்.
புளியை தண்ணீரில் சற்று நேரம் ஊற வைத்து, பிறகு கரைத்து சுமார் ஒன்றரை கப் அளவிற்கு திக்கான கரைசலாக எடுத்து வைக்கவும்.
அரை மூடி தேங்காயைத் துருவி அல்லது துண்டுகளாக நறுக்கி எடுத்து, அதனுடன் தக்காளியையும் சேர்த்து மிக்ஸியில் இட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பிலை, வடகம் போட்டு, அத்துடன் தட்டி வைத்துள்ள பூண்டு, வெங்காயத்தையும் சேர்த்து 20 விநாடிகள் வதக்கவும்.
புளிக்கரைசலில் அரைத்து வைத்துள்ள தக்காளி, தேங்காய் கலவையை ஊற்றி கரைத்து வாணலியில் ஊற்றவும். அதில் மிளகாய்த்தூள், தனியாத்தூள் சேர்க்கவும். இதனை சுமார் மூன்று நிமிடங்கள் கொதிக்கவிடவும். மூன்று நிமிடங்கள் கழித்து, நன்கு கொதித்து குழம்பு போல் வந்தவுடன் நறுக்கி வைத்துள்ள காய்களையும், உப்பையும் சேர்த்து, வாணலியை மூடி வைத்து வேகவிடவும்.
குழம்பு மேலும் நன்கு கொதித்து, சற்று சுண்டி வந்தவுடன் இறக்கி பரிமாறவும்.