வாழை மசாலா குழம்பு
தேவையான பொருட்கள்:
வாழைக்காய் - 3
சின்ன வெங்காயம் - 15
பூண்டு - 10 + 7
தேங்காய் துருவல் - 1/4 கப்
கறிவேப்பிலை - 2 கொத்து
புளி - சின்ன எலுமிச்சை அளவு
கடுகு - 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
துவரம் பருப்பு - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
கலந்த மிளகாய் தூள் - 3 1/2 மேசைக்கரண்டி
சோம்பு - 1/2 தேக்கரண்டி
பட்டை - 1
கிராம்பு - 4
ஏலக்காய் - 4
எண்ணெய் - தேவையான அளவு
கல் உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வாழைக்காயை தோல் சீவி வட்டமான வில்லைகளாக நறுக்கவும். பூண்டை சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கவும்.
புளியை அரிசி களைந்த தண்ணீரை ஊற்றி கரைத்து 2 கப் அளவு எடுத்து வைத்துக் கொள்ளவும். புளி கரைச்சலுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு போட்டு கரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சின்ன வெங்காயம் 10, பூண்டு 10, தேங்காய் துருவல், பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு ஆகியவற்றை போட்டு 2 நிமிடம் வதக்கவும்.
அரைத்தவற்றை எடுத்து ஆற வைத்து மிக்ஸியில் அல்லது அம்மியில் விழுதாக அரைத்து எடுக்கவும்.
வாணலியில் 3 மேசைக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, கடுகு, வெந்தயம் போட்டு தாளித்து அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
அதில் நறுக்கிய வாழைக்காய் போட்டு ஒரு முறை நன்கு பிரட்டி விட்டு அதில் கரைத்து வைத்திருக்கும் புளி கரைச்சலை ஊற்றி 15 நிமிடம் கொதிக்க விடவும்.
நன்கு கொதித்ததும் அரைத்த விழுதை போட்டு கிளறி 5 நிமிடம் கொதிக்க விடவும்.
பின்னர் இந்த குழம்பை குக்கரில் ஊற்றி மூடி வெய்ட் போட்டு ஒரு விசில் வந்ததும் இறக்கி பரிமாறவும்.