வல்லாரை வற்றல் குழம்பு
தேவையான பொருட்கள்:
வல்லாரை கீரை - 3 கட்டு
பூண்டு - 2
கொத்தவரங்காய் வற்றல் - 6
மிளகாய் தூள் - 1/2 மேசைக்கரண்டி + ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
மல்லி தூள் - 2 தேக்கரண்டி
வடகம் - 1/2 தேக்கரண்டி
வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 2 கொத்து
புளி - எலுமிச்சை அளவு
மிளகு - 1 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 20
தக்காளி - 1
தேங்காய்த் துருவல் - 1/4 கப்
எண்ணெய் - 2 தேக்கரண்டி + 3 மேசைக்கரண்டி
கல் உப்பு - ஒரு தேக்கரண்டி
செய்முறை:
வல்லாரை கீரையை ஆய்ந்து எடுத்து தண்ணீரில் போட்டு அலசி சுத்தம் செய்துக் கொள்ளவும்.
சின்ன வெங்காயம் மற்றும் பூண்டை தோல் உரித்து வைத்துக் கொள்ளவும்.
தேங்காயை துருவி வைத்துக் கொள்ளவும். தக்காளியை துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தோல் உரித்து வைத்திருக்கும் பூண்டை போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து பொன்னிறமாக சிவக்கும் வரை 4 நிமிடம் வதக்கவும்.
பின்னர் பூண்டு நன்கு வதங்கியதும் அதனுடன் அலசி எடுத்து வைத்திருக்கும் வல்லாரை கீரையை போட்டு மேலும் ஒரு நிமிடம் வதக்கி இறக்கவும்.
வதக்கிய பூண்டு மற்றும் வல்லாரை கீரையுடன் தேங்காய் துருவல், மிளகு சேர்த்து தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் அரை கப் தண்ணீர் ஊற்றி புளியை போட்டு 10 நிமிடம் ஊற வைத்து கரைத்து திக்கான புளிக்கரைசல் எடுத்துக் கொள்ளவும். அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லித் தூள், உப்பு, அரைத்த விழுது போட்டு கரைத்துக் கொள்ளவும். அதனுடன் 1 1/4 கப் தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் 3 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உளுத்தம் பருப்பு, வெந்தயம், கறிவேப்பிலை, வடகம், போட்டு தாளிக்கவும்.
அதன் பின்னர் சின்ன வெங்காயம் மற்றும் ஏதாவது ஒரு வகை வற்றல் போட்டு ஒரு நிமிடம் வதக்கிய பிறகு, நறுக்கின தக்காளி போட்டு மீண்டும் ஒரு நிமிடம் வதக்கவும்.
தக்காளி மற்றும் வெங்காயம் நன்கு வதங்கியதும் அதில் கரைத்து எடுத்து வைத்திருக்கும் புளிக்கலவையை ஊற்றவும்.
புளிக்கலவையை ஊற்றி 10 நிமிடம் மூடி வைத்து கொதிக்க விடவும். தக்காளி கரையும் வரை மூடி வைத்து கொதிக்க விடவும். தக்காளியை நசுக்கி விட்டும் போடலாம்.
பின்னர் மூடியைத் திறந்து, குழம்பினை கிளறி விட்டு வேகவிடவும். 5 நிமிடம் கழித்து குழம்பு சற்று திக்கானதும் இறக்கி விடவும். இறக்குவதற்கு முன்பு விருப்பப்பட்டால் ஒரு தேக்கரண்டி தூள் வெல்லம் சேர்த்து கிளறி பரிமாறவும்.
குறிப்புகள்:
இதில் எந்த வகை வற்றல் வேண்டுமானாலும் சேர்த்து செய்யலாம்.
முருங்கைக்காய் போட்டு செய்தால் மிகவும் வாசனையாக இருக்கும்.