மொச்சை முருங்கை புளிக்குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

காய்ந்த மொச்சைக்கொட்டை - 1 கப்

முருங்கைக்காய் - 1

சின்ன வெங்காயம் - 15

பொடியாக அரிந்த வெங்காயம் - 1/4 கப்

பொடியாக அரிந்த தக்காளி - 2

புளி - ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு

கலந்த மிளகாய்த் தூள் - 1 1/2 மேசைக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

வெந்தயப் பொடி - 1 1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிது

கொத்தமல்லித் தழை - சிறிது

நல்லெண்ணெய் - 1/4 கப்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

மொச்சைக்கொட்டையை முந்தைய நாள் இரவே தண்ணீர் ஊற்றி ஊற வைத்துவிடவும்.

முருங்கைக்காயைத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தின் தோலை உரித்து வைக்கவும். மற்ற தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும்.

ஊறிய மொச்சைக்கொட்டையைக் குக்கரில் போட்டு 4 விசில் வரும் வரை வேக வைத்து, ஆறியதும் தண்ணீரை வடித்து எடுத்துக் கொள்ளவும்.

புளியில் தண்ணீர் ஊற்றி ஊற வைத்து, பிறகு கரைத்து வடிகட்டி வைக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கி, சின்ன வெங்காயம் மற்றும் பொடியாக அரிந்த வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.

பிறகு கறிவேப்பிலை, தக்காளி, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு குழையும் வரை வதக்கவும்.

வதங்கியதும் வெந்தயப் பொடி சேர்த்து ஓரிரு நிமிடங்கள் வதக்கிய பிறகு புளிக் கரைசலை ஊற்றவும்.

அத்துடன் முருங்கைக்காய், கலந்த மிளகாய்த் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாகக் கொதிக்கவிடவும்.

முருங்கைக்காய் வெந்ததும் மொச்சைக்கொட்டையைச் சேர்த்து கொதிக்கவிடவும். நன்றாகக் கொதித்ததும் 2 தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி இறக்கி கொத்தமல்லித் தழை தூவி பரிமாறவும்.

குறிப்புகள்: