மொச்சை குழம்பு (1)
தேவையான பொருட்கள்:
மொச்சை - 1 கப்
தக்காளி - 3
பச்சை மிளகாய் - 4
கத்திரிக்காய் - 4
எண்ணெய் - 1/4 கப்
மிளகாய் தூள் - 2 1/2 தேக்கரண்டி
மல்லி தூள் - 2 1/2 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 12
தேங்காய் - ஒரு மூடி
புளி - பெரிய நெல்லிக்காய் அளவு
கடுகு - அரை தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - ஒரு மேசைக்கரண்டி
கல் உப்பு - 2 தேக்கரண்டி
செய்முறை:
முதலில் குக்கரில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் அதில் மொச்சையை போட்டு 2 நிமிடம் வாசனை வரும் வரை வறுக்கவும். பிறகு அதில் 2 1/2 கப் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி வைத்து 3 விசில் வரும் வரை வேக விடவும்.
மொச்சை வேகும் நேரத்தில் கத்திரிக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். 8 வெங்காயத்தை நான்கு துண்டுகளாக நறுக்கி விட்டு 4 வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். தக்காளியை மெல்லிய துண்டுகளாக நறுக்கவும்.
தேங்காயை விழுதாக அரைத்துக் கொள்ளவும். புளியை அரை கப் அளவிற்கு கெட்டியாக கரைத்து எடுக்கவும்.
மொச்சை வெந்தவுடன் குக்கரை திறந்து அதில் நறுக்கின தக்காளி, கத்திரிக்காய், நான்காய் நறுக்கின 8 வெங்காயம், கீறின பச்சை மிளகாய் போட்டு கிளறி விடவும்.
பிறகு அதில் மல்லித் தூள், மிளகாய்த் தூள், உப்பு போட்டு கலக்கிவிடவும்.
அத்துடன் அரை கப் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி ஒரு விசில் வரும் வரை வேக விடவும்.
ஒரு விசில் வந்தவுடன் திறந்து அதில் கரைத்து வைத்துள்ள புளியை ஊற்றவும். இப்போது திறந்து வைத்து மேலும் 5 நிமிடம் கொதிக்க விடவும்.
பிறகு தேங்காய் விழுது சேர்த்து கலக்கி 4 நிமிடம் கழித்து இறக்கி விடவும்.
வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளித்து பொடியாய் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
வதக்கிய வெங்காயத்தை குழம்புடன் சேர்த்து கிளறி விட்டு பரிமாறவும்.