முருங்கைக்காய் பொரித்த குழம்பு
தேவையான பொருட்கள்:
முருங்கைக்காய் - 2
நறுக்கின வெங்காயம் - 4 மேசைக்கரண்டி
நறுக்கின பூண்டு - 4 மேசைக்கரண்டி
புளி - சிறிய பாக்களவு
பெரிய சீரகம் (சோம்பு) - 1 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
கறித்தூள் - 1 1/2 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
எண்ணெய் - பொரிப்பதற்கு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முருங்கைக்காயை விரல் நீள அளவு துண்டுகளாக வெட்டி இரண்டாக நறுக்கிக் கொள்ளவும். பூண்டு, வெங்காயம் இரண்டையும் நீளவாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளவும். புளியை ஒரு பாத்திரத்தில் போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ளவும். மற்ற
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கி வைத்திருக்கும் முருங்கைக்காய் துண்டுகளை போடவும்.
முருங்கைக்காயை நன்கு சிவக்க விட்டு பொன்முறுவலாக பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
மற்றொரு வாணலியில் 2 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கின வெங்காயம், பூண்டு, கடுகு, சோம்பு, வெந்தயம், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும் பொரித்து வைத்திருக்கும் முருங்கைக்காய் துண்டுகளை போட்டு 2 நிமிடம் வதக்கவும்.
பிறகு அதில் கரைத்து வைத்திருக்கும் புளிக்கரைசலை ஊற்றி அதனுடன் அரை கப் தண்ணீர் ஊற்றி கறித்தூள், உப்பு போட்டு கிளறி விடவும்.
இந்த கலவையை நன்கு கிளறி விட்டு மூடி வைத்து கொதிக்க விடவும். குழம்பு கொதித்து சற்று கெட்டியான பதம் வந்து எண்ணெய் பிரியும் நேரம் இறக்கி வைத்து விட்டு பரிமாறவும் .
குறிப்புகள்:
இலங்கையில் தண்ணீருக்கு பதிலாக இதில் தேங்காய் பாலை சேர்த்து சமைப்பார்கள். சுவை மிகவும் அருமையாக இருக்கும்.
இதை சாதம், இடியாப்பம், புட்டு என அனைத்து உணவுகளுடனும் பக்க உணவாக சாப்பிடலாம்.