மிளகு வெங்காயக் குழம்பு
தேவையான பொருட்கள்:
உரித்த சாம்பார் வெங்காயம் - 1 கோப்பை
புளி - எலுமிச்சை அளவு
தக்காளி - 1
இஞ்சி - ஒரு அங்குலத் துண்டு
பூண்டு - 4 பற்கள்
மஞ்சள்தூள் - 1 தேக்கரண்டி
பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
மிளகு - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 1/4 கோப்பை
உப்பு - தேவையான அளவு
பொடிக்க:
மிளகு - 2 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
துவரம் பருப்பு - 2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 4
தனியா - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
செய்முறை:
ஒரு தேக்கரண்டி எண்ணெயில் பொடிக்கு தேவையான பொருட்களை ஒவ்வொன்றாகப் போட்டு சிவக்க வறுத்து பொடித்து வைக்கவும்.
இஞ்சி பூண்டு வெங்காயம் ஆகியவற்றை சிறிதாகவும், தக்காளியை சற்று பெரிய துண்டுகளாக நறுக்கவும்.
புளியை சுடு தண்ணீரில் ஊறவைத்து உப்பைச் சேர்த்து நான்கு கோப்பை வருமாறு நீரை ஊற்றி கரைத்து வடிகட்டிவைக்கவும்.
பிறகு அதில் பொடித்து வைத்துள்ள பொடியை போட்டு நன்கு கலந்து வைக்கவும்.
ஒரு சட்டியில் எண்ணெயைக் காயவைத்து கடுகு மற்றும் மிளகைப் போட்டு பொரியவிட்டு அதில் வெங்காயம் இஞ்சி பூண்டைப் போட்டு சிறிது வதக்கவும்.
பிறகு அதில் தக்காளி, மஞ்சள்தூள் மற்றும் பெருங்காயத்தூளைச் சேர்த்து வதக்கவும். தக்காளி நன்கு கரைந்தவுடன் புளிக்கரைசலை ஊற்றி நன்கு கலக்கிவிட்டு கொதிக்கவிடவும்.
குழம்பு நன்கு கொதித்து சற்று கெட்டியான பதம் வந்தவுடன் அடுப்பின் அனலை மிகவும் குறைத்து வைத்திருந்து பத்து நிமிடம் கழித்து இறக்கி பரிமாறவும்.
குறிப்புகள்:
இந்த சுவையான குழம்பிற்கு அப்பளம் மற்றும் உருளைக்கிழங்கு பொடிமாஸ் நல்ல பொருத்தமாக இருக்கும்.