மணத்தக்காளிக் காய் குழம்பு
தேவையான பொருட்கள்:
பச்சை மணத்தக்காளிக் காய் - 1/2 கப்
சின்ன வெங்காயம் - 20
தக்காளி - 4
முழு பூண்டு - 2 1
தனியாத் தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
சீரகம் - 1/4 தேக்கரண்டி
கடுகு - 1/4 தேக்கரண்டி
வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 10
தேங்காய் துருவல் - 3 மேசைக்கரண்டி
கசகசா - 2 தேக்கரண்டி
முந்திரி - 4
நல்லெண்ணெய் - 1/2 கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வெங்காயத்தை இரண்டாகவும், தக்காளியைப் பொடியாகவும் நறுக்கிக் கொள்ளவும். பூண்டை உரித்து வைக்கவும். தேங்காய் துருவலுடன் முந்திரி மற்றும் கசகசா சேர்த்து நைசாக அரைத்தெடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம் மற்றும் வெந்தயம் போட்டுத் தாளித்து, பூண்டைச் சேர்த்து வதக்கவும்.
பூண்டு பாதி வதங்கியதும் வெங்காயம் மற்றும் கறிவேப்பிலைச் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும் மணத்தக்காளிக் காயைச் சேர்த்து வதக்கவும். (மணத்தக்காளிக் காய் சேர்த்து வதக்கும் போது லேசாக மூடி வைத்திருக்கவும். இல்லையெனில் காய் வெடித்து வெளியில் சிதறி விழும்).
காய் வதங்கியதும் தக்காளி, தூள் வகைகள் மற்றும் உப்புச் சேர்த்து நன்கு வதக்கவும்.
தக்காளி குழைய வதங்கியதும் அரைத்த விழுதைச் சேர்க்கவும்.
அத்துடன் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
நன்கு கொதித்து எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கி பரிமாறவும்.
குறிப்புகள்:
ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும். தக்காளிக்கு பதிலாக புளிக் கரைசல் சேர்த்தும் செய்யலாம்.
மணத்தக்காளிக் காய் உடம்புக்கு மிகவும் நல்லது. சூட்டை தணிக்கும். வயிற்றுப் புண் மற்றும் வாய்ப் புண்ணை ஆற்றும்.