பொரித்த குழம்பு (3)
தேவையான பொருட்கள்:
முருங்கைக்காய் - 2
செள செள - 1
அவரைக்காய் - 100 கிராம்
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 4
சின்ன வெங்காயம் - 10
சோம்பு - 1/2 தேக்கரண்டி
தேங்காய் துருவல் - அரை மூடி
கசகசா - 2 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
கலந்த மிளகாய் தூள் - 3 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
உப்பு - 2 தேக்கரண்டி
செய்முறை:
முருங்கைக்காயை ஒரு அங்குல துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
செளசெளவை தோலை சீவி விட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அவரைக்காயின் இரண்டு ஓரங்களிலும் உள்ள நாரை நீக்கி விட்டு இரண்டாக நறுக்கிக் கொள்ளவும்.
சின்ன வெங்காயத்தை தோல் உரித்து விட்டு இரண்டாக நறுக்கிக் கொள்ளவும்.
தக்காளியை சிறு சிறுத் துண்டாக நறுக்கிக் கொள்ளவும்.
பச்சை மிளகாயை இரண்டாக கீறிக் கொள்ளவும்.
தேங்காயை துருவி வைத்துக் கொள்ளவும். குழம்புக்கு தேவையான மற்ற தேவையான அனைத்து பொருட்களையும் தயாராக எடுத்துக் கொள்ளவும்.
பின்னர் மிக்ஸியில் தேங்காய் துருவல், சோம்பு, கசகசா ஆகியவற்றை போட்டு தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
அதன் பிறகு ஒரு பாத்திரத்தில் அரைத்த தேங்காய் விழுதை போட்டு அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு மற்றும் 3 கப் தண்ணீர் சேர்த்து கரைத்து எடுத்துக் கொள்ளவும்.
கரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுது கலவையுடன் நறுக்கி வைத்திருக்கும் அவரைக்காய், முருங்கைகாய், செளசெள ஆகியவற்றை தண்ணீரில் அலசி விட்டு போடவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். அதனுடன் நறுக்கின வெங்காயம், தக்காளி மற்றும் பச்சை மிளகாய் போட்டு 2 நிமிடம் வதக்கவும்.
பிறகு காய்கறிகள் போட்ட தேங்காய் கலவையை அடுப்பில் வைத்து அதில் வதக்கியவற்றை போடவும்.
குழம்பை நன்கு கொதிக்க விடவும். 25 நிமிடம் கொதிக்க விடவும். காய்கள் வெந்ததும் இறக்கி கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
குறிப்புகள்:
முருங்கைகாய் மட்டும் வைத்து செய்யலாம். இரண்டு அல்லது மூன்று காய்கறிகள் சேர்த்தால் மிகவும் ருசியாக இருக்கும்.