பாலக்காடு மோர் குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வெண்டைக்காய் - 100 கிராம்

மோர் - 1/4 லிட்டர்

தேங்காய் - ஒரு மூடி

மிளகாய் வற்றல் - 9

கறிவேப்பிலை - ஒரு கொத்து

இஞ்சி - 1/2 அங்குலத் துண்டு

சீரகம் - 1 தேக்கரண்டி

வெந்தயம் - 1 1/2 தேக்கரண்டி

கடலைப் பருப்பு - 1 மேசைக்கரண்டி

பச்சரிசி - 1/2 மேசைக்கரண்டி

தனியா - 1 மேசைக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

பெருங்காயத் தூள் - 1/4 தேக்கரண்டி

கடுகு - 1/2 தேக்கரண்டி

எண்ணெய் - 3 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வெண்டைக்காயை சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

தேங்காயை சிறு சிறுத் துண்டுகளாக கீறிக் கொள்ளவும்.

இஞ்சை தோல் சீவிக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் மோரை ஊற்றி அதில் உப்பு, மஞ்சள் தூள் மற்றும் பெருங்காயத் தூள் போட்டு கலந்து வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளிக்கவும். கடுகு வெடித்ததும் நறுக்கின வெண்டைக்காயை போட்டு 3 நிமிடம் வதக்கி எடுத்துக் கொள்ளவும். வெண்டைக்காயை எண்ணெயில் வதக்குவதால் சீக்கரத்தில் வெந்து விடும்.

அதே வாணலியில் மேலும் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மிளகாய் வற்றல் போட்டு ஒரு நிமிடம் வறுக்கவும்.

அதன் பின்னர் அதில் தனியா, கடலைப் பருப்பு, வெந்தயம், சீரகம், பச்சரிசி போட்டு 5 நிமிடம் வறுத்துக் கொள்ளவும். வறுத்த பிறகு ஒரு தட்டில் கொட்டி ஆற விடவும்.

ஆறியதும் வறுத்தவற்றை எடுத்து மிக்ஸியில் போட்டு அதனுடன் தேங்காய், இஞ்சி சேர்த்து தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் மஞ்சள் தூள் மற்றும் உப்பு போட்டு கரைத்து வைத்திருக்கும் மோரில் அரைத்த விழுதை போடவும்.

மோருடன் அரைத்த விழுது ஒன்றாக சேரும் படி நன்கு கரண்டியால் கரைத்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.

ஒரு கொதி வந்ததும் வதக்கிய வெண்டைக்காய் மற்றும் கறிவேப்பிலை போட்டு ஒரு முறை பொங்கி வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்:

வெண்டைக்காய்க்கு பதிலாக பூசணிக்காய் சேர்த்து செய்யலாம்.