பாகற்காய் தீயல்
தேவையான பொருட்கள்:
பாகற்காய் - 2
வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சைமிளகாய் - 2
கடுகு - 1/2 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 2
கறிவேப்பிலை - 3 இணுக்கு
புளி - நெல்லிகாய் அளவு
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தீயல் பொடி:
தேங்காய் துருவியது - 1 கப்
மிளகாய் வற்றல் - 7
மல்லி - 1 தேக்கரண்டி
நல்ல மிளகு - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 2 இணுக்கு
செய்முறை:
முதலில் தீயல் பொடியினை தயார் செய்துகொள்ளவும். மேலே பொடி செய்வதற்கு கொடுக்கப்பட்டுள்ள பொருட்களில் தேங்காய் தவிர அனைத்தையும் வெறும் கடாயில் போட்டு வறுக்கவும். கடைசியில் தேங்காயும் போட்டு சிவக்க வறுக்கவும். சூடு ஆறினவுடன் மிக்ஸியில் போட்டு பொடி செய்துகொள்ளவும். தண்ணீர் சேர்க்கக்கூடாது. தேங்காய் சேர்ப்பதினால் அதில் உள்ள எண்ணையினாலேயே நன்கு அரைபட்டு பேஸ்ட் போல் ஆகிவிடும்.
பாகற்காயை அரை அங்குல நீளத்தில் மெல்லிய துண்டுகளாக்கவும்.
வெங்காயத்தை நீளமாக நறுக்கவும்(சிறிய வெங்காயம் நல்லது).
தக்காளி, பச்சைமிளகாயை நறுக்கி வைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை போடவும். அது வெடித்த பிறகு நறுக்கின வெங்காயம் சேர்க்கவும்.
அத்துடன் நறுக்கி வைத்துள்ள பாகற்காய் துண்டங்களைச் சேர்த்து பச்சை வாடை போக நன்கு வதக்கவும்.
பின்னர் நறுக்கி வைத்துள்ள தக்காளி சேர்க்கவும். அத்துடன் தேவையான அளவு உப்பும் சேர்த்து வதக்கவும்.
நன்றாக வதங்கியவுடன் புளி தண்ணீரை ஊற்றி கொதிக்கவிடவும்.
சுமார் ஐந்து நிமிடங்கள் கொதித்த பிறகு மிக்ஸியில் அரைத்து வைத்துள்ள தீயல் பொடியை (அது பேஸ்ட் போல் இருக்கும்) சேர்த்து, தேவையான அளவு தண்ணீரும் சேர்த்து கொதிக்கவிடவும்.
பாகற்காய் நன்கு வெந்தவுடன் மேலே சிறிது தேங்காய் எண்ணெய் விட்டு கறிவேப்பிலையும் போட்டு பரிமாறவும்.
குறிப்புகள்:
இதே முறையில் பாகற்காய்க்கு மாற்றாக, முருங்கைக்காய், சேனை, சின்ன வெங்காயம், வழுதலங்காய் போன்றவற்றை சேர்த்தும் செய்யலாம்.
தீயல் பொடி இல்லை என்றால் மல்லி பொடி, காரத்தூள், மஞ்சள் தூள், தேங்காய் போன்றவற்றை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி, அதனை சேர்த்தும் செய்யலாம்.
இதனை சூடான சாதத்துடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.