பாகற்காய் குழம்பு (2)
தேவையான பொருட்கள்:
பாகற்காய் - 4
சிகப்பு வெங்காயம் – 1 (பெரியது)
பூண்டு - 5/6 பற்கள்
தக்காளி - 1
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
புளி – சிறிய எலுமிச்சை அளவு
வெல்லம் – சிறிய துண்டு
உப்பு - தேவையான அளவு
வறுத்து அரைக்க:
காய்ந்த மிளகாய் – 3 (அல்லது) காரத்திற்கேற்ப
தனியா – 2 மேசைக்கரண்டி
மிளகு – 1/2 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
தேங்காய் துருவல் – 1 மேசைக்கரண்டி
பயத்தம்பருப்பு - 1 மேசைக்கரண்டி
தாளிக்க:
கடுகு - 1/2 தேக்கரண்டி
வெந்தயம் – 1/2 தேக்கரண்டி
எண்ணெய் – 4 தேக்கரண்டி
கறிவேப்பிலை – ஒரு இணுக்கு
செய்முறை:
முதலில் பாகற்காயை கழுவி சுத்தம் செய்து, வட்டவடிவ வில்லைகளாக நறுக்கி விதைகளை நீக்கி வைக்கவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.
பூண்டை தோலுரித்து, பெரிய பல்லாக இருந்தால் நீளவாக்கில் இரண்டாக நறுக்கி வைக்கவும். புளியை சிறிது நேரம் தண்ணீரில் போட்டு வைக்கவும்.
பயத்தம் பருப்பை வெறும் வாணலியில் சில நொடிகள், சற்று வாசனை வர வறுத்து தண்ணீரில் போட்டு வைக்கவும்.
பிறகு கால் தேக்கரண்டி எண்ணெய் விட்டு, அதில், ‘வறுத்து அரைக்க’ லிஸ்ட்டில் உள்ளவற்றில் மிளகாய், மிளகு, தனியா, சீரகம் ஒவ்வொன்றாக போட்டு வறுக்கவும்.
சேர்ந்து லேசாக வறுப்பட்டதும், கடைசியில் கால் பாகம் நறுக்கி வைத்த வெங்காயம் மற்றும் தேங்காய் துருவலை சேர்த்து ஒரு வதக்கு வதக்கி தனியே எடுத்து ஆற வைக்கவும். கூடவே சில கறிவேப்பிலை இலைகளையும் சேர்த்துக் கொள்ளலாம், நல்ல வாசனையாக இருக்கும்.
அடுத்து, ஊற வைத்த பயத்தம் பருப்புடன், ஆற வைத்த மசாலா பொருட்களையும் சேர்த்து மிக்ஸியில் போட்டு கொஞ்சம் தண்ணீர் விட்டு மசாலாவாக அரைத்து வைக்கவும். ஊற வைத்த புளியை பிசைந்துவிட்டு புளித்தண்ணீர் எடுத்து வைக்கவும்.
ஒரு பெரிய பாத்திரத்தில், 2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு சூடானதும், பாகற்காயை போட்டு சில நிமிடங்கள் வதக்கவும். காய் வதங்கியதும் அதை ஒரு தட்டில் எடுத்து வைக்கவும்.
அதே பாத்திரத்தில், மேலும் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும், கடுகு, வெந்தயம் தாளித்து, கூடவே வெங்காயம் போட்டு வதக்கவும்.
வெங்காயம் சிறிது நிறம் மாறி வதங்கியதும், பூண்டு, கறிவேப்பிலை, தக்காளி ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து சிறிது மஞ்சள் பொடியும் போட்டு நன்கு வதக்கவும்.
வெங்காயம் தக்காளி சேர்ந்து நன்றாக குழைந்து வந்ததும், முன்பே வதக்கி வைத்த பாகற்காய் துண்டுகளை போட்டு, கூடவே அரைத்து வைத்த மசாலாவையும் சேர்க்கவும்.
அதில் ஒரு கப் தண்ணீரையும் சேர்த்து, குழம்புக்கு தேவையான உப்பை போட்டு கலந்துவிட்டு, ஒரு மூடியிட்டு நன்றாக கொதிக்க விடவும்.
சுமார் 5 - 8 நிமிடங்களில் காய் ஓரளவு வெந்ததும், கரைத்து வைத்த புளித்தண்ணீர், வெல்லம் சேர்த்து மேலும் கொஞ்ச நேரம் நன்றாக கொதிக்கவிட்டு இறக்கி பரிமாறவும்.
சுவையான பாகற்காய் குழம்பு தயார்!
குறிப்புகள்:
காயின் உள்ளே இருக்கும் விதைகளை நீக்குவது அவரவர் விருப்பத்தை பொறுத்தது. காய் கொஞ்சம் முற்றலாக இருக்கும்போது இப்படி விதைகளை நீக்கி சமைப்பது கண்டிப்பாக கசப்பை குறைக்க உதவும்.
சூடான சாதத்தில் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும் இந்த பாகற்காய் குழம்பு.