பருப்பு குழம்பு (1)
தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு - 3/4 கப்
காய்ந்த மிளகாய் - 6 (அ) 7
வெங்காயம் - பாதி
பூண்டு - 3 (அல்லது) 4 பல்
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
புளி - ஒரு எலுமிச்சம் பழம் அளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பூண்டை தோல் எடுத்து வைக்கவும்.
கடாயில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி துவரம் பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு வறுக்கவும்.
சிறிது வதங்கியவுடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பூண்டு, வெந்தயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
துவரம் பருப்பு சிவக்க வறுத்தெடுக்கவும். வறுக்கும் போது பருப்பின் மணம் நன்றாக வர வேண்டும். பருப்பு தீய கூடாது.
பின்னர் வறுத்து வைத்துள்ள பருப்பு, மிளகாய், வெங்காயம், பூண்டு ஆகியவற்றை ஒரு குக்கரில் போட்டு, புளி மற்றும் உப்பு சேர்க்கவும்.
குக்கரில் 2 அல்லது 3 டம்ளர் தண்ணீர் சேர்த்து மூடி வேக வைக்கவும்.
சாம்பாருக்கு 4 விசில் வைத்தால், இதற்கு 3 விசில் மட்டும் விட்டால் போதும்.
பிறகு ஆறியதும் மிக்சியில் போட்டு மிளகாய், வெங்காயம், பூண்டு, புளி சேர்த்து மசிய அரைக்கவும். பிறகு பருப்பு சேர்த்து ஒன்று இரண்டாய் அரைத்து பரிமாறவும். பருப்பு குழைய கூடாது.
குறிப்புகள்:
புளி சேர்க்கும் போது, அப்படியே போட்டு வேக வைக்காமல், கரைத்த புளியும் சேர்க்கலாம். அரைத்து வைத்துள்ள குழம்பு கொஞ்சம் திக்காக இருக்க வேண்டும். இதற்கு வடகம் போட்டு தாளிக்கலாம். தாளிக்காமலும் நன்றாக இருக்கும்.
இந்த குழம்பிற்கு உருளைக்கிழங்கு பொரியல் மற்றும் அப்பளம் நல்ல காம்பினேஷன். உங்கள் சுவைக்கேற்ப மிளகாய் மற்றும் புளியின் அளவு வேறுபடும்.