நெல்லை பருப்பு குழம்பு
தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு - 1 கப்
வெங்காயம் - 1 (அல்லது) சின்ன வெங்காயம் - ஒரு கைப்பிடி அளவு
பூண்டு - 2 பற்கள்
பச்சை மிளகாய் - 3
தேங்காய் - ஒரு சில்லு
தக்காளி - 1 (அல்லது) 2
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
புளி - சுண்டைக்காய் அளவு
சீரகம் - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை - சிறிது
பெருங்காயப் பொடி - ஒரு சிட்டிகை
வெங்காயம் - சிறிது
செய்முறை:
தேவையான அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும். புளியைக் கால் கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி வைக்கவும்.
இடி உரலில் அல்லது மிக்ஸியில் தேங்காய், பச்சை மிளகாய், சீரகம் மற்றும் ஒரு கொத்து கறிவேப்பிலைச் சேர்த்து கொரகொரப்பாக இடித்துக் கொள்ளவும்.
குக்கரில் துவரம் பருப்புடன் நறுக்கிய தக்காளி, வெங்காயம், பூண்டு, மஞ்சள் தூள், மற்றும் உப்புச் சேர்த்து வேக வைக்கவும்.
வெந்த பருப்புடன் இடித்த தேங்காய் விழுது மற்றும் புளிக்கரைசல் சேர்த்து, அடுப்பில் வைத்து ஒரு கொதி வரவிடவும்.
கொதி வந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து குழம்பில் சேர்த்து பரிமாறவும்.
குறிப்புகள்:
சாதம், பச்சடி மற்றும் ஏதாவது ஒரு ரோஸ்ட்டுடன் சாப்பிடச் சிறந்தது.
தேங்காயை நைசாக அரைக்கக் கூடாது. குழம்பில் தேங்காய் மிதந்து கொண்டிருக்க வேண்டும்.
புளியும் மிகக் குறைவாகவே சேர்க்க வேண்டும்.