தட்டைப் பயறு முழு கத்தரிக்காய் குழம்பு
தேவையான பொருட்கள்:
பிஞ்சு கத்தரிக்காய் - 5 (காம்பில் பாதி வெட்டி, பின்னால் இருந்து பாதி பாதியாக நான்காக ஆனால் முழுதாக இருக்குமாறு வெட்டவும்)
வேகவைத்த தட்டைப் பயிறு - 1 கப்
நறுக்கிய வெங்காயம் - 1/2 கப்
நறுக்கிய தக்காளி - 2
வெந்தய பொடி - 1 தேக்கரண்டி
பெருங்காய தூள் - 1 தேக்கரண்டி
சாம்பார் பொடி - 2 1/2 தேக்கரண்டி
புளி - 1 கோலி அளவு (கரைத்து வடிகட்டி வைக்கவும்)
தேங்காய் - 2 பத்தை (நன்கு மாவு போல அரைத்தது)
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணைய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து கறிவேப்பிலை போடவும்.
பின் வெந்தயப் பொடி,பெருங்காயம், வெங்காயம், தக்காளி சேர்த்து பேஸ்ட் போல வதக்கி கத்தரிக்காய் சேர்த்து நன்கு கத்தரிக்காய் உடையாமல் வதக்கி உப்பு, சாம்பார் பொடி போட்டு தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
ஒரு கொதி கொதித்ததும் புளித்தண்ணீர் சேர்த்து மீண்டும் கொதிக்கவிடவும்.
இதனுடன் வேகவைத்த தட்டாம்பயிறு சேர்த்து அரைத்த தேங்காயை ஊற்றி கொதிவந்ததும் 1 தேக்கரண்டி நல்லெண்ணைய் ஊற்றி கலக்கி நன்கு கொதித்ததும் இறக்கி பரிமாறவும்.