சுண்டைக்காய் குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சுண்டைக்காய் - ஒரு ஆழாக்கு

சின்ன வெங்காயம் - 100 கிராம்

உரித்த பூண்டு - ஒரு கைப்பிடி அளவு

குழம்பு மிளகாய் தூள் - 1 மேசைக்கரண்டி

கடலைப்பருப்பு - 2 தேக்கரண்டி

சீரகம் - ஒரு தேக்கரண்டி

கொத்தமல்லி - 2 தேக்கரன்டி

தேங்காய் துருவல் - 3 மேசைக்கரண்டி

கறிவேப்பிலை - 20

தக்காளி - 2

புளி - ஒரு எலுமிச்சம் பழ அளவு

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

வெல்லம் - ஒரு சுண்டைக்காய் அளவு

வறுத்து பொடித்த வெந்தயப் பொடி - 1/2 தேக்கரண்டி

நல்லெண்ணெய் - 1/2 கப்

உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

கடுகு - 1/2 தேக்கரண்டி

சீரகம் - 1/2 தேக்கரண்டி

வெந்தயம் - 1/2 தேக்கரண்டி

செய்முறை:

சுண்டைக்காயைத் தட்டி, அதிலுள்ள விதை போக தண்ணீரில் அலசிக் கொள்ளவும். வெங்காயத்தை தோலுரித்து இரண்டாக நறுக்கி வைக்கவும். தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். 2 டம்ளர் தண்ணீரில் புளியை ஊறவைத்து, கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.

வெறும் வாணலியில் கடலைப்பருப்பு, சீரகம் மற்றும் கொத்தமல்லியை சிவக்க வறுத்தெடுத்து ஆற வைக்கவும்.

வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு பாதி வெங்காயம், சிறிது கறிவேப்பிலை மற்றும் தேங்காயைச் சேர்த்து நன்கு வதக்கி ஆற வைக்கவும்.

முதலில் வறுத்து ஆற வைத்தவற்றை மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக பொடித்துக் கொள்ளவும்.

அதனுடன் வதக்கி ஆற வைத்தவற்றையும் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு நைசாக அரைக்கவும்.

வாணலியில் மீதமுள்ள எண்ணெயை விட்டு, தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து, பூண்டைச் சேர்த்து வதக்கவும்.

பூண்டு நன்கு வதங்கியதும் மீதமுள்ள வெங்காயம் மற்றும் கறிவேப்பிலையைச் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் சுண்டைக்காய் மற்றும் தக்காளியைச் சேர்த்து நன்கு வதக்கவும்.

அதனுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து பிரட்டவும்.

பிறகு புளிக்கரைசல், அரைத்து வைத்துள்ள விழுது மற்றும் உப்பு சேர்த்து கலந்து நன்கு கொதிக்கவிடவும். குழம்பு கொதித்து நன்கு கெட்டியானதும் வெந்தயப் பொடி மற்றும் வெல்லம் சேர்த்து கலந்துவிட்டு இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்:

இந்தக் குழம்பை மண் சட்டி அல்லது கல் சட்டியில் செய்தால் இன்னும் அதிகச் சுவையாக இருக்கும். அடுத்த நாள் தான் குழம்பின் சுவை கூடும்.