கொள்ளுப் பருப்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கொள்ளு - 1 கப்

சின்ன வெங்காயம் - 1/4 கப்

தனியா - 1 மேசைக்கரண்டி

சீரகம் - 1 தேக்கரண்டி

பூண்டு - 4 பல்

இஞ்சி - சிறு துண்டு

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை - 4 இணுக்கு

வரமிளகாய் - 3 (அவரவர் காரத்திற்கேற்ப)

தக்காளி - 1

உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

கடுகு, உளுத்தம் பருப்பு - சிறிது

எண்ணெய் - 1 தேக்கரண்டி

செய்முறை:

கொள்ளை நன்கு சுத்தம் செய்து கல் போக அரித்தெடுக்கவும்.

பூண்டு மற்றும் இஞ்சியைத் தோல் நீக்கி வைக்கவும்.

குக்கரில் கொள்ளுடன் மஞ்சள் தூள், தோல் நீக்கிய இஞ்சி, பூண்டு மற்றும் நறுக்கிய தக்காளி போட்டு, மூழ்கும் அளவு நீர் ஊற்றி 4 விசில் வரும் வரை வேகவிடவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு மற்றும் உளுத்தம் பருப்பு தாளித்து, நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் கறிவேப்பிலைப் போட்டு வதக்கவும்.

வதங்கியவுடன் அடுப்பை சிறு தீயில் வைத்து தனியா, சீரகம் மற்றும் வரமிளகாய் ஆகியவற்றைப் போட்டு வதக்கவும்.

வதக்கியவற்றை எடுத்து ஆறவிடவும். குக்கரில் ப்ரஷர் அடங்கியதும் குக்கரைத் திறந்து வேகவைத்த கொள்ளையும் எடுத்து ஆறவிடவும்.

ஆறியதும் அனைத்தையும் ஒன்றாக மிக்ஸியில் போட்டு உப்புச் சேர்த்து அரைத்தெடுத்து பரிமாறவும்..

குறிப்புகள்:

நெய் விட்டு சாதத்தில் பிசைந்து சாப்பிடச் சுவையாக இருக்கும்.

இவை அனைத்தையும் குக்கரில் போட்டு வேகவிட்டு ஆறவைத்து அரைத்தும் சாப்பிடலாம். வெங்காயத்தை வதக்காமல் போடும் போது ஒரு துளிகூட எண்ணெய் இல்லாத கொள்ளுப் பருப்பு இன்னும் ஆரோக்கியமானதே!

இந்த கொள்ளுப் பருப்பு தயார் செய்த சில மணி நேரங்களிலேயே புளித்து போய்விடும். அதனால் இதை ஒரு வேளைக்கு மட்டுமே சாப்பிடலாம். தக்காளிக்கு பதிலாக புளி (சிறு கோலி அளவு) சேர்த்தால் மாலை வரை வீணாகாமல் இருக்கும்.

கொள்ளு உடல் எடையினை குறைக்க பெரிதும் உதவுகிறது நார்ச்சத்து உடையது. இது சூடான உணவு என்பதால், கர்ப்பிணிகள் மருத்துவரின் ஆலோசனையின்படி சாப்பிடவும்.