கீரை குழம்பு (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

அரைக்கீரை (அல்லது) சிறுக்கீரை - 2 கட்டு

துவரம் பருப்பு - 1 கோப்பை

வெங்காயம் - 2

தக்காளி - 2

பச்சை மிளகாய் - 6

பூண்டு - 10 பற்கள்

புளி - சிறிய எலுமிச்சையளவு

பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி

சீரகம் - 1/4 தேக்கரண்டி

தாளிக்க - சிறிது வடகம் (அல்லது) கடுகு 1 தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி

வெந்தயம் - 1/4 தேக்கரண்டி

காய்ந்த மிளகாய் - 2

வெங்காயம் - 1 மேசைக்கரண்டி

கறிவேப்பிலை - ஒரு கொத்து

எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

துவரம் பருப்பை கழுவி ஒரு மணி நேரத்திற்கு ஊறவைக்கவும்.

கீரையை ஆய்ந்துக் கொள்ளவும். பிறகு ஒரு பெரிய சர்வ பாத்திரத்தில் பாதியளவுவிற்கு தண்ணீரை ஊற்றி ஆய்ந்த கீரையை அதில் போட்டு கலக்கி ஒரு ஐந்து நிமிடத்திற்கு அப்படியே வைக்கவும்.

பிறகு கீரையை மட்டும் அரித்து எடுத்து மாற்றவும். தண்ணீரின் அடியில் மண் சிறிய கற்கள் தங்கி இருக்கும். அந்த நீரை அலசி கொட்டி விட்டு பாத்திரத்தை நன்கு கழுவி மீண்டும் நீரை நிரப்பவும்.

அதில் ஒரு பிடி கீரையை மட்டும் போட்டு நன்கு அலசி மாற்றி வைக்கவும். இதைபோலவே எல்லாக் கீரையையும் பிடி பிடியாக போட்டு அலசி வைக்கவும். குறைந்தது இரண்டு முறை தண்ணீரை மாற்றி கீரையை சுத்தம் செய்துக் வைக்கவும்.

புளியை சுடு தண்ணீரில் ஊற வைத்து கெட்டியாக கரைத்துக் கொள்ளவும்.

தக்காளி, வெங்காயம், பச்சைமிளகாயை நறுக்கி வைக்கவும். பூண்டின் தோலை உரித்து வைக்கவும்.

குழம்பு செய்யும் பாத்திரத்தில் ஊறிய பருப்பை போட்டு அதனுடன் தக்காளி, வெங்காயம், பச்சைமிளகாய், பூண்டு, மஞ்சள்தூள், சீரகம், பெருங்காயம் ஆகியவற்றை போட்டு கலக்கி நான்கு கோப்பை நீரை ஊற்றி வேகவைக்கவும். பருப்பு நன்கு மலர்ந்து வெந்தவுடன் சுத்தம் செய்த கீரையைக் கொட்டி நன்கு கிளறி விட்டு மூடி போடாமல் வேகவிடவும்.

கீரை நன்கு வெந்தவுடன் நீரை வடித்து விட்டு உப்புத்தூளை போட்டு நன்கு கடைந்துக் கொள்ளவும்.

பிறகு புளியை ஊற்றி நன்கு கலக்கவும். வடித்து வைத்த நீரை சேர்த்து நன்கு கலக்கவும். குழம்பு சற்று கெட்டியாக இருக்க வேண்டும். ஆகவே மேற்கொண்டு நீரை ஊற்ற கூடாது. புளியை ஊற்றிய பிறகு குழம்பை கொதிக்க வைக்கவும் கூடாது.

பிறகு ஒரு சிறிய சட்டியில் எண்ணெயைக் காய வைத்து வடகத்தை பிய்த்துப் போட்டு தாளித்து ஊற்றவும். அல்லது தாளிப்பு பொருட்களைப் போட்டு நன்கு கருக வறுத்து குழம்பின் மீது கொட்டவும்.

குறிப்புகள்:

வெள்ளை சோற்றுடன் இந்த குழம்பும், வஞ்சரக் கருவாடு வறுவலும் நன்கு ஒத்து போகும்.