கீரை குழம்பு
தேவையான பொருட்கள்:
அரைக்கீரை (அல்லது) சிறு கீரை - 2 கட்டு
துவரம் பருப்பு - 1 கப்
வெங்காயம் - 2
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 6
பூண்டு - 10 பற்கள்
புளி - சிறு எலுமிச்சை அளவு
பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
சீரகம் - 1/4 தேக்கரண்டி
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
வடகம் - சிறிது (அல்லது) கடுகு - 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 2
வெங்காயம் - 1 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
செய்முறை:
துவரம் பருப்பைக் கழுவி ஒரு மணி நேரத்திற்கு ஊற வைக்கவும். கீரையை ஆய்ந்து தண்ணீரில் நன்றாக அலசி சுத்தமாக எடுத்து வைக்கவும். (குறைந்தது 2 முறை தண்ணீரில் அலசவும்). புளியை சுடு தண்ணீரில் ஊற வைத்து கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் ஊறிய பருப்பைப் போட்டு அதனுடன் நறுக்கிய தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், தோலுரித்த பூண்டு, மஞ்சள் தூள், சீரகம் மற்றும் பெருங்காயம் போட்டு, 4 கப் தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.
பருப்பு நன்கு வெந்தவுடன் சுத்தம் செய்த கீரையைக் கொட்டி, நன்கு கிளறிவிட்டு மூடி போடாமல் வேகவிடவும்.
கீரை நன்கு வெந்தவுடன் நீரை வடித்து விட்டு உப்புத் தூளை போட்டு நன்கு கடைந்து கொள்ளவும்.
பிறகு புளிக் கரைசல் மற்றும் வடித்து வைத்த நீர் சேர்த்து நன்கு கலக்கவும். சற்று கெட்டியாக இருக்க வேண்டும். ஆகவே மேற்கொண்டு நீரை ஊற்றக் கூடாது. புளியை ஊற்றிய பிறகு குழம்பை கொதிக்க வைக்கவும் கூடாது.
வாணலியில் எண்ணெயைக் காய வைத்து வடகம் தாளித்து, மற்ற தாளிப்பு பொருட்களைப் போட்டு நன்கு கருக வறுத்து குழம்பில் கொட்டி பரிமாறவும்.
குறிப்புகள்:
வெள்ளை சாதத்துடன் இந்தக் கீரைக் குழம்பும், வஞ்சரக் கருவாடு வறுவலும் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்.
குக்கரையும், மிக்ஸியையும் உபயோகிக்காமல் செய்யும் பழைய முறை கீரை குழம்பு இது. சூழ்நிலைக்கேற்ப இவைகளை பாவித்தும் இந்த குழம்பை செய்யலாம். ஆனால் சுவையில் பெரிய அளவில் வித்தியாசம் இருக்கும்.