கமலா பழத்தோல் பூண்டு குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பொடியாக அரிந்த கமலா பழத்தோல் - 1 கப்

வெங்காயம் - 2

பூண்டு - 10 பல்

மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி

பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை

மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை

புளி - எலுமிச்சை அளவு

கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி

வெள்ளை உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி

கடுகு - 1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை - ஒரு கொத்து

வெல்லம் - நெல்லிக்காய் அளவு

எண்ணெய் - 1 குழிக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் நல்ல கமலா பழங்களை தேர்ந்தெடுத்து தோல்களை பொடியாக அரிந்து கொள்ளவும்.

பூண்டு, வெங்காயம் ஆகியவற்றையும் தோலுரித்துப் பொடியாக அரிந்து கொள்ளவும். புளியை கரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கி அதில் கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும்.

பின் அதில் பொடியாக அரிந்த வெங்காயம், பூண்டு போட்டு நன்கு சிவக்க வதக்கவும்.

அதன் பின் பழத்தோல்களை போட்டு நன்கு கிளறி விட்டு அடுப்பை நிதானமாக எரியவிட்டு தோல் மென்மையாகும் வரை கிளறிவிட்டு வதக்கவும். (அப்போது தான் அதில் உள்ள கார்ப்பு சுவை போகும்).

நன்கு வதங்கியதும் புளிக்கரைசலை கொட்டி 5 நிமிடம் வேக விடவும். இக்கலவையில் மிளகாய் தூள், உப்பு, மஞ்சள் தூள், வெல்லம் போட்டு நன்கு கலக்கவும்.

வெல்லம் கரைந்தவுடன் இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்:

இது வயதானவர்களுக்கு நன்கு ஜீரணசக்தியை கொடுக்கும் மருத்துவ குணம் கொண்ட குழம்பு.

இதை இரண்டு நாட்கள் வைத்து இருந்து சாப்பிடலாம்.