கத்தரிக்காய் மசாலா குழம்பு
தேவையான பொருட்கள்:
கத்தரிக்காய் - 1/2 கிலோ
மிளகாய் வற்றல் - 2
பச்சை மிளகாய் - 2
தேங்காய் - 1/2 மூடி
மல்லி விதை - 1 மேசைக்கரண்டி
பூண்டு - 6 பல்
எள்ளு - 1 தேக்கரண்டி
வெங்காயம் - 1/4 கிலோ
புளி - ஒரு எலுமிச்சை அளவு
வெல்லம் - ஒரு பாக்கு அளவு
கடுகு - 1/2 தேக்கரண்டி
மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
நெய் - 2 மேசைக்கரண்டி
நல்லெண்ணெய் - 150 மில்லி லிட்டர்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கத்தரிக்காயை கழுவிச் சுத்தம் செய்து மேல்காம்பினை நீக்கிவிடாமல் நீளவாக்கில் நான்காக கீறிக் கொள்ளவும்.
துண்டுகள் தனித்தனியே வந்துவிடாதவண்ணம் காம்பு பாகத்தை நறுக்கிவிடாமல் விட்டுவிடவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு நறுக்கி வைத்துள்ள கத்தரிக்காய்களைப் போட்டு பொன்னிறமாக மாறும்வரை வதக்கி தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.
அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெய்யில் மல்லிவிதை, மிளகாய்வற்றல் மற்றும் வெங்காயத்தைப் போட்டு வறுக்கவும்.
வறுத்தவற்றை தேங்காய் மற்றும் பூண்டுடன் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
எள்ளினை தனியாக வறுத்துப் பொடித்துக் கொள்ளவும். புளியை ஊறவைத்துக் கரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் மீதமுள்ள எண்ணெய்யில் புளிக்கரைசலை ஊற்றி அதனுடன் அரைத்து வைத்துள்ள மசாலாவினைக் கலந்து வேகவிடவும்.
பிறகு அதில் கத்தரிக்காய்கள் மற்றும் எள்ளுப்பொடி போட்டு மூடி வைத்து வேகவிடவும்.
குழம்பானது சற்றுக் கெட்டியானதும் வெல்லத்தை அதில் போட்டு வேகவிடவும். குழம்பு நன்கு கெட்டியானதும் இறக்கி விடவும்.
மற்றொரு வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து குழம்பில் கொட்டி கலக்கி பரிமாறவும்.