கத்தரிக்காய் பொரிச்ச குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கத்தரிக்காய் - 2 (350 கிராம் அல்லது 400 கிராம்)

நறுக்கின வெங்காயம் - 4 மேசைக்கரண்டி

நறுக்கின உள்ளி - 4 மேசைக்கரண்டி

புளி - சிறிய நெல்லிக்காய் அளவு

தேங்காய் துருவல் - 1/4 கப்

பெரிய சீரகம் (சோம்பு) - 1 தேக்கரண்டி

கடுகு - 1 தேக்கரண்டி

வெந்தயம் - 1/2 தேக்கரண்டி

மிளகாய்தூள் (கறித்தூள்) - 1 அல்லது 1 1/2 மேசைக்கரண்டி

கறிவேப்பிலை - ஒரு கொத்து

எண்ணெய் - பொரிப்பதற்கு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

தேங்காய் துருவலுடன் கால் கப் தண்ணீர் ஊற்றி பிழிந்து முதற் பால் எடுக்கவும். அதன் பிறகு அதே தேங்காய் துருவலில் அரை கப் தண்ணீர் ஊற்றி பிழிந்து இரண்டாம் பால் எடுத்துக் கொள்ளவும்.

புளியுடன் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கரைத்து எடுத்துக் கொள்ளவும்.

கத்தரிக்காயை விரல் அளவில் ஒன்றரை இன்ச் துண்டுகள் அல்லது இரண்டு இன்ச் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் நறுக்கி வைத்திருக்கும் கத்திரிக்காய் துண்டுகளை போட்டு பொரிக்கவும்.

இடையிடையே கிளறி விட்டு எல்லா துண்டுகளும் நன்கு சிவக்க பொரிந்ததும் தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

மற்றொரு பாத்திரத்தில் 2 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் வெங்காயம், உள்ளி, கடுகு, பெருஞ்சீரகம், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.

வெங்காயம் நன்கு வதங்கியதும் வெந்தயம், பொரித்த கத்திரிக்காய் துண்டுகள் போட்டு 2 நிமிடம் வதக்கவும். பின்னர் புளிக்கரைசல், இரண்டாம் தேங்காய் பால், கறித்தூள், உப்பு போட்டு மூடி வைத்து கொதிக்க விடவும்.

குழம்பு நன்கு கொதித்ததும் முதலில் எடுத்த தேங்காய்பாலை ஊற்றி கிளறி விட்டு மீண்டும் கொதிக்க விடவும். குழம்பு கொதித்து கெட்டியாகி எண்ணெய் பிரியும் போது இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்:

இதனை சாதம், இடியாப்பம், புட்டு போன்ற உணவுகளுடன் பக்க உணவாக சாப்பிடலாம்.

கத்திரிக்காயை அதிக நேரம் வறுத்தால் கசப்பாக இருக்கும். அதனால் சிவக்க பொரித்தாலே போதுமானது.