கத்தரிக்காய் குழம்பு (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சின்ன கத்தரிக்காய் - 4

வெங்காயம் - 1

தக்காளி - 1

கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது

சாம்பார் பொடி (மிளகாய், தனியா கலவை 1 : 2) - 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

புளி - ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு

உப்பு - தேவையான அளவு

வறுத்து அரைக்க:

கடலைப்பருப்பு - 1/2 தேக்கரண்டி

உளுந்து - 1/2 தேக்கரண்டி

மிளகு - 1/2 தேக்கரண்டி

சீரகம் - 1/2 தேக்கரண்டி

சின்ன வெங்காயம் - 5 அல்லது7

தேங்காய் துருவல் - 2 மேசைக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிது

சாம்பார் பொடி - 2 தேக்கரண்டி

வெந்தயம் - 1/4 தேக்கரண்டிக்கும் குறைவு

தாளிக்க:

கடுகு - 1/2 தேக்கரண்டி

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

கத்தரிக்காயை நான்காக நறுக்கி (பிரிக்காமல் காம்போடு வகுந்து வைக்க வேண்டும்) வைக்கவும்.

வெங்காயம் நறுக்கி வைக்கவும். புளியை அரை கப் நீர் விட்டு ஊற வைக்கவும்.

கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும் உளுந்து, கடலைப்பருப்பு, வெந்தயம், சீரகம், மிளகு சேர்த்து வறுக்கவும். அடுப்பை விட்டு எடுத்து சூடாக இருக்கும் போதே கறிவேப்பிலை சேர்த்து வதக்கி எடுக்கவும். இதே போல் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு சின்ன வெங்காயம், தேங்காய துருவல் சேர்த்து வதக்கி கடைசியாக சாம்பார் பொடி சேர்த்து வதக்கி எடுக்கவும். இவை அனைத்தையும் ஆற வைத்து சிறிது உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும். நீர் விட தேவை இல்லை.

அரைத்த கலவையை கத்தரிக்காய் நடுவே வைக்கவும். வைத்து நன்றாக அழுத்தி விடவும் அப்போது தான் மசாலா வெளியே வராது. மிச்சம் கலவை இருந்தால் அப்படியே வைக்கவும்.

கடாயில் 2 மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும் கத்தரிக்காய்களை போட்டு எல்லா பக்கமும் பிரட்டி விட்டு வதக்கி எடுக்கவும். கத்தரிக்காய் வேக வேண்டும், ஆனால் விட்டு போக கூடாது.

பெரிய வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி மூன்றையும் மிக்ஸியில் சுற்றி எடுக்கவும். கடாயில் மீண்டும் 2 மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு தாளித்து அரைத்த வெங்காய விழுது சேர்க்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி அரைத்து ஊற்றி வதக்கவும். தக்காளி நன்றாக வதங்கி, எண்ணெய் பிரிந்து வரும் போது மஞ்சள் தூள், உப்பு, சாம்பார் பொடி சேர்த்து பிரட்டி விடவும்.

இதில் மீதம் இருக்கும் வறுத்து அரைத்த மசாலா, வதக்கி வைத்த கத்தரிக்காய், சிறிது நீர் விட்டு மூடி கொதிக்க விடவும்.

கத்தரிக்காய் மசாலாவுடன் கலந்து தூளின் பச்சை வாசம் போனதும் புளி கரைசல் சேர்த்து நன்றாக எண்ணெய் பிரிந்து வர கொதிக்க விட்டு எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்:

கத்தரிக்காய் கடைசி வரை விட்டு போகாமல் இருக்க வேண்டும். கரண்டி போடும் போது பார்த்து கிளறவும். உள்ளே வைக்கும் மசாலாவில் போடும் உப்பு மிக குறைவாக இருக்கட்டும், குழம்பிலும் உப்பு சேர்ப்பதால் கவனமாக சேர்க்கவும். அரைத்த மசாலாவில் தூள் வாசம் இருந்தால் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு அரைத்த விழுதை வதக்கி எடுத்து ஸ்டஃப் செய்யலாம்.

அரைத்த மசாலா சிறிதேனும் எடுத்து வைக்கவும். அதையும் குழம்பில் கலந்து கொதிக்கும் போது சுவை இன்னும் நன்றாக இருக்கும். வெங்காயம் தக்காளி அரைத்து சேர்ப்பதாலும், மிளகாய் வற்றல், தனியா வறுத்து அரைக்காமல் தூள் சேர்ப்பதாலும் குழம்பு ரொம்பவே ஸ்மூத் க்ரேவியா கிடைக்கும்.

கறிவேப்பிலை, கொத்தமல்லி கூட ஒன்றிரண்டாக அரைத்து விடுவதால் சாப்பிடும் போது குழந்தைகள் எடுத்து வைக்க மாட்டார்கள். வாசமும் குழம்பில் நன்றாக இருக்கும். சாதத்துடன் சாப்பிட மிக சுவையான குழம்பு இது.