எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு (1)
தேவையான பொருட்கள்:
பிஞ்சு கத்திரிக்காய் - 1/4 கிலோ
சின்ன வெங்காயம் - 200 கிராம்
தேங்காய் - அரை மூடி
கசகசா - 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 8
பூண்டு - 4 பல்
சீரகம் - 1/2 தேக்கரண்டி
தனியா தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
புளி - ஒரு பெரிய எலுமிச்சம் பழ அளவு
கறிவேப்பிலை - சிறிது
வெல்லம் - சிறிது
கடுகு - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கத்திரிக்காயை பாதி காம்பை மட்டும் நறுக்கி விட்டு நான்காக பிளந்து தண்ணீரில் போட்டு வைக்கவும்.
தேங்காயை துருவி வைத்துக் கொள்ளவும். புளியை ஒரு டம்ளர் தண்ணீரில் ஊற வைத்து கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.
வெங்காயத்தை தோல் உரித்து வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மிளகாய், சீரகம், வெங்காயம் சேர்த்து வதக்கவும். வதக்கியவை ஆறியதும் அதனுடன் தேங்காய் துருவல், கசகசா, தனியா தூள் சேர்த்து விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
அரைத்து எடுத்த விழுதை நறுக்கி வைத்திருக்கும் கத்திரிக்காயில் வைத்து நிரப்பவும். மீதமுள்ள விழுதை புளிக்கரைசலுடன் சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி கடுகு, பூண்டு, கறிவேப்பிலை தாளித்து கத்திரிக்காயை சேர்த்து வதக்கவும்.
வதக்கியதும் புளிக்கரைசலை ஊற்றி மஞ்சள் தூள், வெல்லம் சேர்த்து கொதிக்க விடவும். கத்திரிக்காய் வெந்து குழம்பு கெட்டியாக ஆனதும் இறக்கி பரிமாறவும்.