உருண்டைக் குழம்பு
தேவையான பொருட்கள்:
கடலைப்பருப்பு - 200 கிராம்
வெங்காயம் - 2 + 2
தக்காளி - 2
தேங்காய் - ஒரு மூடி
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
மல்லித் தூள் - 3 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 4 + 2 + 2
கறிவேப்பிலை - 2 கொத்து
கொத்தமல்லித் தழை - 1 மேசைக்கரண்டி
பூண்டு - 4 பல் (தட்டிக் கொள்ளவும்)
சோம்பு - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கடலைப்பருப்பை 2 மணி நேரம் ஊற வைக்கவும். தேங்காய் துருவலுடன் 4 பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
வெங்காயத்தை நீளவாக்கிலும், தக்காளியை துண்டுகளாகவும் நறுக்கவும்.
பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
கடலைப்பருப்பு ஊறியதும் ஒன்றிரண்டாக அரைத்து எடுக்கவும். அதனுடன் 2 வெங்காயம், 2 பச்சை மிளகாய், முக்கால் தேக்கரண்டி உப்பு போட்டு பிசைந்து, பெரிய எலுமிச்சையளவு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
வாணலியில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் உருண்டைகளை போட்டு பொன்னிறமாக பொரிக்கவும்.
இதேபோல் மீதமுள்ள உருண்டைகளையும் பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
மற்றொரு வாணலியில் 2 மேசைக்கரண்டி எண்ணெய், ஒரு மேசைக்கரண்டி டால்டா ஊற்றி காய்ந்ததும் சோம்பு தாளிக்கவும். அதனுடன் தட்டிய பூண்டை போட்டு சிவந்ததும் மீதியுள்ள வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் கறிவேப்பிலை மற்றும் 2 பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
அதனுடன் தக்காளியைச் சேர்த்து குழையும் வரை வதக்கவும். அதன் பிறகு மிளகாய் தூள், மல்லித் தூள் போட்டு பிரட்டிவிட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்கவிடவும்.
கொதித்ததும் தேங்காய் விழுதைச் சேர்த்து 2 கப் தண்ணீர் ஊற்றி, ஒரு தேக்கரண்டி உப்பு போட்டு கலந்து கொள்ளவும்.
பிறகு பொரித்த உருண்டைகளைப் போட்டு கொதிக்கவிடவும். கடைசியில் கொத்தமல்லித் தழை தூவி இறக்கி பரிமாறவும்.