செட்டிநாடு இறால் பிரியாணி
தேவையான பொருட்கள்:
இறால் - 1/2 கிலோ
பாசுமதி அரிசி - 2 கப்
வெங்காயம் - 2
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 3
இஞ்சி பூண்டு விழுது - 1 மேசைக்கரண்டி
தயிர் - 1 மேசைக்கரண்டி
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
கறி தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - சிறிது
பிரியாணி மசாலா - 1/2 தேக்கரண்டி
மல்லித் தழை, புதினா - ஒரு கைப்பிடி
உப்பு - தேவையான அளவு
ஊற வைக்க:
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1/4 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - சிறிது
சோம்பு தூள் - 1 தேக்கரண்டி
தாளிக்க:
பட்டை - சிறு துண்டு
லவங்கம் - 3
ஏலக்காய் - 3
பிரியாணி இலை - ஒன்று
அன்னாசிப்பூ - பாதி
மராத்தி மொக்கு - ஒன்று
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
செய்முறை:
இறாலை சுத்தம் செய்து ஊற வைக்க கொடுத்தவற்றை சேர்க்கவும். இது குறைந்தது ஒரு மணி நேரம் ஊற வேண்டும். பாசுமதி அரிசியை களைந்து 20 நிமிடம் ஊற விடவும். பச்சை மிளகாயை நசுக்கி வைக்கவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கவும். பின் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் முக்கால் பதம் வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது, நசுக்கி வைத்துள்ள பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
பின் இறாலைச் சேர்த்து ஒரு முறை பிரட்டி விடவும். அதிகம் வதக்கக் கூடாது.
தயிர் மற்றும் தூள் வகைகள் சேர்த்து பிரட்டவும்.
பின் 2 கப் அரிசிக்கு 3 1/4 - 3 1/2 கப் நீர் விட்டு உப்பு, மல்லித் தழை புதினா சேர்த்து கொதிக்க விடவும்.
நன்றாக கொதி வந்ததும் அரிசியை சேர்த்து மீண்டும் ஒரு கொதி விடவும். பின் மூடி சிறுந்தீயில் வைக்கவும். முக்கால் பதம் வெந்ததும் தம்மில் போடவும்.
குறிப்புகள்:
இங்கு கறி தூள் என்பது மிளகாய், தனியா மேலும் சில பொருட்கள் சேர்த்து அரைத்து. கடைகளில் கிடைக்கும் தூள்.
ரெடிமேட் கறி தூளும் பயன்படுத்தலாம்.
இறால் ஃப்ரெஷாகக் கிடைத்தால் நன்றாக இருக்கும்.
விரும்பினால் நீருக்கு பதில் பாதி தேங்காய் பாலும், பாதி நீரும் கூட பயன்படுத்தலாம்.
நீரின் அளவு அவரவர் பயன்படுத்தும் அரிசிக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளவும்.
அரிசி சேர்த்த உடனே கலந்து விடுவதோடு விட்டு விடவும். அடிக்கடி கிளறினால் பிரியாணி குழைந்து போகும்.