சீயம்
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 3 ஆழாக்கு
உளுந்து - 2 ஆழாக்கு
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
பூரணத்திற்கு:
கடலைப்பருப்பு - 1/4 கிலோ
வெல்லம் - 1/4 கிலோ
ஏலக்காய் - 5
நெய் - 2 மேசைக்கரண்டி
செய்முறை:
பச்சரிசி, உளுந்தினை மூன்று மணி நேரம் ஊற வைக்கவும். ஒரு லிட்டர் தண்ணீரை கொதிக்க வைத்து அடுப்பை அணைத்து விட்டு கடலைப்பருப்பை போட்டு மூடி வைக்கவும்.
அரை மணி நேரம் கழித்து பருப்பில் உள்ள நீரை வடித்து விட்டு மிக்ஸியில் போட்டு குருணைப்பதத்திற்கு அரைக்கவும்.
அரிசி, உளுந்தை உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு அரைக்கவும். வெல்லத்தை பொடியாக்கி அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சி வைத்துக் கொள்ளவும்.
ஏலக்காயை தோலுரித்து பொடிக்கவும்.
அடுப்பில் ஒரு கடாயை வைத்து நெய் ஊற்றி அரைத்த கடலைப்பருப்பு விழுது போட்டு இரண்டு நிமிடம் வதக்கி பாகு, ஏலப்பொடி சேர்த்து நன்கு கெட்டியாகும் வரை கிளறி இறக்கவும்.
கை பொறுக்கும் சூடு வந்தவுடன் உருண்டைகளாக உருட்டி வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் உருண்டைகளை அரைத்து வைத்துள்ள அரிசிமாவு கலவையில் முக்கி எடுத்துப் போடவும்.
பொன்னிறமானதும் எடுத்து எண்ணெய் உறிஞ்சும் தாளில் சுற்றி தட்டில் அடுக்கவும்.