காரைக்குடி சிக்கன் கறி
தேவையான பொருட்கள்:
சிக்கன் - 1/2 கிலோ
வெங்காயம் (பெரியது) - 1
தக்காளி - 2
கறிவேப்பிலை - 2 கொத்து
சோம்பு - 1/4 தேக்கரண்டி (தாளிக்க)
சாம்பார் பொடி அல்லது மிளகாய் தனியா தூள் கலவை - 2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2 அல்லது மிளகு (விரும்பினால்) - 2 தேக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
அரைக்க:
மிளகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 6
தனியா - 4 தேக்கரண்டி
பட்டை - ஒரு துண்டு
கிராம்பு - 5
ஏலக்காய் - 4
மராத்தி மொக்கு - சிறிது
ஜாதிக்காய் - கால் பாகம்
கறிவேப்பிலை - 8 கொத்து
தேங்காய் துருவல் - 4 மேசைக்கரண்டி
செய்முறை:
சிக்கன் துண்டுகளை சுத்தம் செய்து மஞ்சள் தூள், சிறிது உப்பு மற்றும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பிரட்டி வைக்கவும்.
கடாயில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் அரைக்க கொடுத்துள்ளவற்றில் தேங்காய் துருவல், கறிவேப்பிலை தவிர மற்ற அனைத்தையும் சேர்த்து லேசாக சிவக்க வறுக்கவும்.
அதன் பிறகு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
கடைசியாக தேங்காய் துருவல் சேர்த்து லேசாக வதக்கி எடுத்து ஆறவிடவும்.
ஆறியதும் முதலில் பொடியாக அரைத்து பின்பு தேவைக்கேற்ப நீர் விட்டு நைசாக அரைத்துக் எடுத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு சோம்பு தாளித்து, சிறிது கறிவேப்பிலை மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கவும். (பச்சை மிளகாய் சேர்க்க விரும்பினால் சேர்க்கலாம்).
அதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி குழைய வதங்கியதும் சாம்பார் பொடி அல்லது மிளகாய் மற்றும் தனியா தூள் சேர்த்து பிரட்டி எண்ணெய் பிரிய வதக்கவும்.
தூள் வாசம் போனதும் ஊற வைத்த சிக்கன் துண்டுகளைச் சேர்த்து பிரட்டி மூடி வேகவிடவும். (நீர் சேர்க்கத் தேவையில்லை. சிக்கனிலிருந்து வரும் நீர் மசாலாவோடு கலந்து மீண்டும் சிக்கன் அதை முழுவதுமாக இழுத்துவிடும். இவ்வாறு செய்வதால் சிக்கனுடன் மசாலா சேர்ந்து நன்றாக ஊறி இருக்கும்).
சிக்கன் நன்றாக வெந்ததும் அரைத்த மசாலா கலவையை ஊற்றி கலந்து கொதிக்கவிடவும்.
பச்சை வாசம் போகக் கொதித்து எண்ணெய் பிரியும் போது சிறிது கறிவேப்பிலை மற்றும் மிளகு தூள் (விரும்பினால்) சேர்த்து கலந்து 2 நிமிடங்கள் கழித்து இறக்கி பரிமாறவும்.
குறிப்புகள்:
பச்சை மிளகாய் கடைசியாக சேர்த்தால் மிளகு தூள் சேர்க்கத் தேவையில்லை.
ஃப்ரெஷாக பொடித்த மிளகு சேர்க்க விரும்பினால் பச்சை மிளகாயை தவிர்த்துவிடலாம்.