ஸ்வீட் கார்ன் சூப் (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ஸ்வீட் கார்ன் - 1 கப்

நீளமாக நறுக்கிய வெங்காயம் - 2 மேசைக்கரண்டி

நீளமாக நறுக்கிய காரட் - 2 மேசைக்கரண்டி

பச்சை பட்டாணி - 1 மேசைக்கரண்டி

பொடியாக நறுக்கிய பூண்டு - 2 பல்

காளான் - 3

கார்ன் மாவு - 1 மேசைக்கரண்டி

பால் - 1/2 கப்

மிளகு தூள் - 1/4 தேக்கரண்டி

சோயா சாஸ் - 1/4 தேக்கரண்டி

வினிகர் - சில துளிகள்

ஆலிவ் ஆயில் - 2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் காய்கறிகளை பொடியாக நீளவாக்கில் நறுக்கி வைக்கவும். பூண்டை பொடியாக நறுக்கி வைக்கவும். 2 மேசைக்கரண்டி அளவு கார்ன் எடுத்து தண்ணீர் சேர்த்து சற்று கொர கொரப்பாக அரைத்து வைக்கவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பூண்டு சேர்த்து வதக்கவும். சிவந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் அதிகம் வதங்க கூடாது. அப்படி வதங்கினால் குழைந்து விடும். உப்மாவிற்கு வதக்கும் பதம் தான் இதற்கும்.

பிறகு மற்ற காய்கறிகளை சேர்த்து வதக்கவும். காய்கறிகளையும் அதிகம் வதக்க கூடாது. ஐந்து நிமிடமே போதுமானது.

காய்கறிகள் சிறிது வதங்கியதும் சோயா சாஸ் சேர்த்து வதக்கவும்.

இரண்டு நிமிடம் வதக்கி அரைத்து வைத்துள்ள கார்ன் சேர்த்து வதக்கவும்.

மூன்று நிமிடம் வதக்கிய பிறகு மூன்று கப் தண்ணீர் சேர்க்கவும். இப்பொழுது சிறிதளவு வினிகர், உப்பு, மிளகு தூள் சேர்க்கவும். சோயா சாஸ் மற்றும் வினிகர் சேர்த்திருப்பதால் உப்பின் அளவை குறைத்தே சேர்க்கவும்.

பாலை காய்ச்சி ஆற வைக்கவும். வெது வெதுப்பாக இருக்கும் பொழுது அதனுடன் கார்ன் மாவு சேர்த்து கட்டியில்லாமல் கரைக்கவும். இந்த கரைசலை சூப்பில் சேர்க்கவும்.

ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்து சிறிதளவு வெங்காய தாள் அல்லது சைவ்ஸ் அல்லது கொத்தமல்லி தூவி சூப் பவுலில் பரிமாறவும்.

குறிப்புகள்:

இதனுடன் முட்டையும் சேர்த்து செய்யலாம். ஒரு முட்டையை நன்கு நுரை வரும் வரையிலும் அடித்து வைக்கவும்.

பிறகு கார்ன் மாவு கரைசல் சேர்த்து ஒரு கொதி வந்ததும் முட்டையை மெதுவாக கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிளறவும்.

இரண்டொரு நிமிடத்தில் அடுப்பை அணைத்து விடவும். அதிகம் சூடு படுத்தக் கூடாது. சூப்பின் சூட்டிலே அது வெந்து விடும்.