போண்டா சூப்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

போண்டா செய்ய:

உளுந்து - 1 கப்

தேங்காய் - சிறிது

பச்சை மிளகாய் - 3

கறிவேப்பிலை - சிறிது

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - பொரிக்க

சூப் செய்ய:

துவரம் பருப்பு - 1/2 கப்

பாசிப்பருப்பு - 2 மேசைக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிதளவு

கொத்தமல்லித் தழை - கைப்பிடியளவு

கடுகு, எண்ணெய் - தாளிக்க

இஞ்சி - ஒரு துண்டு

பச்சை மிளகாய் - 2

தக்காளி (விரும்பினால்) - 2 துண்டு

மஞ்சள் தூள் - சிறிது

எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

போண்டா:

உளுந்தை 2 மணி நேரம் ஊறவிடவும். ஊறியதும் கிரைண்டரில் நீர் விடாமல் அரைத்துக் கொள்ளவும்.

உளுந்து மாவுடன் தேங்காயை பொடியாக நறுக்கியோ அல்லது துருவியோ சேர்க்கவும். அதனுடன் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மாவை உருண்டைகளாக உருட்டிப் போட்டு பொரிக்கவும்.

நன்றாக சிவந்ததும் எடுத்து எண்ணெயை வடியவிடவும்.

போண்டா தயார்.

சூப்:

இனி சூப் செய்வதற்கு துவரம் பருப்புடன் பாசிப்பருப்பையும் சேர்த்து களைந்து தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து குக்கரில் வேகவைத்து எடுத்து நன்கு மசித்து வைக்கவும்.

பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, பொடியாக துருவிய இஞ்சி சேர்த்து தாளித்து, பின் மசித்து வைத்துள்ள பருப்பைச் சேர்க்கவும்.

அதனுடன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.

இது சாம்பார் போல இல்லாமல் ரசம் போல நீர்க்க இருக்க வேண்டும். அதற்கேற்ப தேவையான அளவு நீர் ஊற்றி நன்றாக கொதிக்கவிட்டு அடுப்பிலிருந்து இறக்கி எலுமிச்சை சாறு பிழிந்துவிடவும்.

ஒரு பௌலில் சூடான போண்டாவை போட்டு அதன் மேல் நிறைய சூப்பை ஊற்றி சூடாகப் பரிமாறவும்.

குறிப்புகள்:

கர்நாடகா ஸ்பெஷல். இங்கே பல உணவகங்களில் சுவைத்தது. கீரை சாம்பாரோ என நினைக்கும் அளவுக்கு இதில் கொத்தமல்லித் தழையின் அளவு அதிகமாக இருக்கும்.

இங்கே சிலர் தக்காளி, பச்சை மிளகாயை பருப்பை வேக வைக்கும் போது சேர்க்காமல், வெந்த பின்பு சேர்த்து கொதிக்கவிடுவார்கள்.

இஞ்சியையும் தாளிப்பில் சேர்க்காமல் பருப்பில் சேர்த்து கொதிக்கவிடுவார்கள். விரும்பினால் பெருங்காயமும் சேர்க்கலாம்.