சூப் சாயுர்
தேவையான பொருட்கள்:
சிறிய கேரட் - ஒன்று
முட்டைகோஸ் - 3 இதழ்கள்
பீன்ஸ் - 4
சிறு பூக்களாக உதிர்த்த காலிஃப்ளவர் - 3/4 கப்
மஷ்ரூம் - 6
கடுகு கீரை (அ) முளைக்கீரை - ஒரு கைப்பிடி
பச்சை மிளகாய் - 1 அல்லது 2 அல்லது காரத்திற்கேற்ப
பூண்டு - 7 பல்
இஞ்சி - ஒரு இன்ச் அளவு
லெங்குவாஸ் (Galangal root) - ஒரு இன்ச் அளவு (ஃப்ரெஷ் சித்தரத்தை)
எலுமிச்சை இலை - 3
சோயா சாஸ் - 2 தேக்கரண்டி
சர்க்கரை (சீனி) - 1/4 தேக்கரண்டி
வெஜ் ஸ்டாக் க்யூப் (விரும்பினால்) - 1/2
எண்ணெய் - 2 தேக்கரண்டி
எலுமிச்சை சாறு - சில துளிகள்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பாத்திரத்தில் எண்ணெயை சூடாக்கி பொடியாக நறுக்கிய பூண்டு, இஞ்சி, கீறிய பச்சை மிளகாய், நசுக்கிய லெங்குவாஸ் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.
பிறகு சிறு துண்டுகளாக நறுக்கிய கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர், மஷ்ரூம் சேர்த்து 3 நிமிடங்கள் வதக்கவும்.
வதக்கியவற்றுடன் 3 கப் தண்ணீர் ஊற்றி சோயா சாஸ், சர்க்கரை, வெஜ் ஸ்டாக் க்யூப் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். எலுமிச்சை இலைகளை ஒன்றிரண்டாக பிய்த்து சேர்க்கவும்.
நன்றாக கொதித்து காய்கறிகள் முக்கால் பதம் வெந்ததும் முட்டைகோஸ் மற்றும் கீரையைச் சேர்த்து 2 நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்கி தேவைக்கேற்ப எலுமிச்சை சாறு சேர்த்து சூப் பவுலில் பரிமாறவும்.
குறிப்புகள்:
பச்சை மிளகாயை வதக்கும் போது சேர்க்காமல் பொடியாக நறுக்கி சோயா சாஸில் ஊற வைத்து அவரவர் காரத்திற்கேற்ப சூப் பருகும் போது சேர்த்துக் கொள்ளலாம்.
மேற்சொன்ன அளவில் நான் வெஜ் சூப் செய்ய விரும்பினால் காய்கறிகளை வதக்கும் போது மெல்லியதாக நறுக்கிய முள் நீக்கிய மீன் அல்லது 100 கிராம் போன்லெஸ் சிக்கன் சேர்த்துக் கொள்ளலாம்.
டோஃபு, முளைகட்டிய பயிறு போன்றவற்றையும் சேர்க்கலாம்.
ரைஸ் நூடுல்ஸை தனியாக வேகவைத்து இந்த சூப்புடன் சேர்த்து சூப் நூடுல்ஸாகவும் பரிமாறலாம்.