ஆட்டுக்கால் சூப் (4)
தேவையான பொருட்கள்:
பெரிய வெங்காயம் - 2
ஆட்டுக்கால் - 4
பட்டை - 1
கிராம்பு - 2
ஏலக்காய் - 1
தக்காளி - 2
இஞ்சி விழுது - 1 மேசைக்கரண்டி
பூண்டு விழுது - 1 மேசைக்கரண்டி
புதினா - ஒரு கொத்து
பச்சை மிளகாய் - 3
மிளகு தூள் - 1 தேக்கரண்டி
சீரகத் தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
அஜினமோட்டோ - ஒரு சிட்டிகை
கொத்தமல்லி - ஒரு கொத்து
கல் உப்பு - 1/2 தேக்கரண்டி
செய்முறை:
ஆட்டுக்காலை உடைத்து அதில் உள்ள முடி மற்றும் தேவையில்லாத பாகங்களை நீக்கி நன்கு சுத்தம் செய்துக் கொள்ளவும்.
பெரிய வெங்காயத்தை தோலுரித்து நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.
தக்காளியை துண்டுகளாக நறுக்கவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறி நறுக்கிக் கொள்ளவும்.
குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு பொரியவிடவும்.
பிறகு நறுக்கின வெங்காயம் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
பின்னர் நறுக்கின தக்காளி, பச்சை மிளகாய் போட்டு ஒரு முறை வதக்கி விட்டு இஞ்சி விழுது, பூண்டு விழுது போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
இப்போது நறுக்கின புதினா, கொத்தமல்லித் தழை, சுத்தம் செய்து வைத்துள்ள ஆட்டுக்கால் துண்டங்கள் ஆகியவற்றைப் போடவும்.
அதில் மிளகுத் தூள், சீரகத் தூள், மஞ்சள் தூள், உப்பு, அஜினமோட்டோ போட்டு கிளறிவிடவும்.
பின்னர் 5 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
கொதித்ததும் குக்கரை மூடி விசில் போடவும். சுமார் 5 விசில் வரும் வரை அடுப்பில் வைத்திருக்கவும்.
அதன்பிறகு எடுத்து ஒரு கோப்பையில் ஊற்றி, மிளகுத் தூளை மேலே தூவி பரிமாறவும்.