ஆட்டுக்கால் சூப் (1)
தேவையான பொருட்கள்:
ஆட்டுக்கால் - 250 கிராம்
தனியா - 2 மேசைக்கரண்டி
மிளகு - 2 தேக்கரண்டி
சீரகம் - 2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 2
வெங்காயம் - 2
இஞ்சி - 2 அங்குல துண்டு
பூண்டு பல் - 3
தக்காளி - 2
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகு, சீரகம், கறிவேப்பிலை, எண்ணெய் - தாளிக்க
கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி இலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
ஆடுக்காலை தீயில் போட்டு சுட்டெடுக்கவும். கடையிலே அப்படி செய்தும் விற்பார்கள். அப்படி செய்வதால் அதிலுள்ள ரோமம் எல்லாம் உதிர்ந்துவிடும். நன்கு சுத்தம் செய்து போதிய அளவு தண்ணீர், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து குக்கரில் 10-15 விசில் வரும் வரை வேக விடவும்.
தனியா, மிளகு, சீரகம் மூன்றையும் தனித்தனியே எண்ணெய் இல்லாமல் வறுத்து எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து பொடித்து வைக்கவும்.
காய்ந்த மிளகாய், வெங்காயம் ஒன்று, இஞ்சி, பூண்டு, தக்காளி ஒன்று, கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலையை ஒன்றாக கொஞ்சம் கொர கொரப்பாக அரைத்து வைக்கவும்.
எண்ணெயை காய வைத்து மிளகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
பொரிந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் சிறிதளவு வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும். அதிகம் குழைய தேவையில்லை.
அதனால் சிறிதளவு வெந்ததும் வேக வைத்துள்ள ஆட்டுக்கால் மற்றும் தண்ணீரை இதனுடன் சேர்க்கவும். உப்பு சரி பார்த்து தேவைப்பட்டால் சேர்க்கவும்.
இப்பொழுது அரைத்து வைத்துள்ள பொடி மற்றும் கலவையை சேர்த்து தீயை குறைத்து வைக்கவும்.
பதினைந்து நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.
கொத்தமல்லி தூவினால் சுவையான ஆட்டுக்கால் சூப் ரெடி.
குறிப்புகள்:
இதை உணவிற்கு முன்னர் ஸ்டார்ட்டர் ஆக பரிமாறலாம்.
குழந்தைகளுக்கென்றால் மிளகாய் இல்லாமல் மிளகின் அளவை குறைத்துக் கொள்ளவும். அல்லது மிளகு இல்லாமல் கடைசியாக மிளகு தூவி கொடுக்கலாம். அவர்களுக்கு கொடுக்கும் போது சிறிதளவு வெண்ணெய் சேர்த்தும் கொடுக்கலாம்.
சளி இருமலுக்கு ஏற்ற மருந்து.