பூரி கிழங்கு

on on on off off 2 - Good!
3 நட்சத்திரங்கள் - 2 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

பூரி செய்ய:

கோதுமை - 1 கப்

மைதா - 1/2 கப்

எண்ணெய் - பூரி பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

மசாலா செய்ய:

உருளைக்கிழங்கு - 3

வெங்காயம் - 1

பச்சை மிளகாய் - 3

இஞ்சி - ஒரு துண்டு

மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை

மைதா மாவு - 2 தேக்கரண்டி

கொத்தமல்லி தழை - சிறிது

உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

கடுகு - 1/4 தேக்கரண்டி

கடலை பருப்பு - 1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

பூரி:

ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, மைதா மாவு, உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். அதனுடன் 2 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து கலக்கவும். இதில் வெதுவெதுப்பான நீரை சிறிது சிறிதாக சேர்த்து, நன்கு கெட்டியாக பிசைந்து கொள்ளவும். இது அரை மணி நேரம் ஊற வேண்டும். ஈர டிஷ்யூ பேப்பர் அல்லது ஈர துணி போட்டு மூடி வைத்தால், மாவு ட்ரை ஆகாமல் இருக்கும்.

பின்னர் ஊறிய மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.

அதை வட்டமாக தேய்த்துக் கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தேய்த்த பூரி மாவை எண்ணெயில் மெதுவாக விடவும். பூரி மேலெழும்பும் போது மெதுவாக கரண்டியால் அழுத்தினால் பூரி நன்கு உப்பி வரும்.

பின்னர் பூரியை மெதுவாக திருப்பி அடுத்த பக்கம் சிவந்ததும் எடுக்கவும். பின்னர் ஒரு டிஷ்யூ பேப்பரில் வைத்து அதிகபடியான எண்ணெயை நீக்கி விடலாம். பூரி தயார்.

மசாலா:

உருளைக்கிழங்குகளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, ஒரு கிண்ணத்தில் போட்டு, உருளைக்கிழங்கு மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு, 6 - 8 நிமிடங்கள் மைக்ரோவேவில் வைத்து வேக விடவும். ஸ்டேண்டிங் டைம் 2 நிமிடங்கள் விடவும். நடு நடுவே ஸ்பூனால் கலந்து விட வேண்டும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, கடலைபருப்பு போட்டு தாளிக்கவும். இதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய இஞ்சி, மஞ்சள்தூள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

வெங்காயம் நன்கு வதங்கியதும் வேக வைத்துள்ள உருளைக்கிழங்கு துண்டுகளை கரண்டியால் மசித்து சேர்க்கவும்.

ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி மைதா மாவை தண்ணீரில் கட்டியில்லாமல் கரைத்து, உருளைக்கிழங்கு மசாலாவில் சேர்க்கவும். இரண்டு நிமிடங்கள் கிளறினால் மைதாமாவு வெந்து, மசாலா கெட்டியாகும்.

பின்னர் கொத்தமல்லி தழை தூவி அடுப்பை நிறுத்தி விடவும். சுவையான, சுலபமாக செய்யக்கூடிய பூரி கிழங்கு தயார்.

குறிப்புகள்:

பூரி மாவு தேய்க்கும் போது, மைதா மாவு சிறிது தொட்டு தேய்த்தால் வட்டமாக தேய்க்க வரும்.

இல்லையெனில் பூரி தேய்த்த பின் ஒரு மூடி வைத்து வட்டமாக கட் பண்ணினாலும் பூரிகள் ஒரே அளவில் கிடைக்கும்.