புட்டு (1)
தேவையான பொருட்கள்:
பச்சரிசி நொய் - 1 டம்ளர்
வெல்லம் தூள் - 1 1/2 டம்ளர்
துவரம் பருப்பு - 1 மேசைக்கரண்டி
தேங்காய் - 1/4 மூடி
முந்திரி - 10
ஏலக்காய் - 5
நெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பச்சரிசி நொய் தயாரிக்க:-
அரிசியை கழுவி, ஒருமணி நேரம் ஊறவைத்து தண்ணீரை வடித்து ஒரு துணியில் உலர வைக்கவும்.
கையில் ஒட்டாத பதம் வந்ததும், மிக்ஸியில் அரைத்து, ரவை ஜல்லடையில் சலித்து வைக்கவும்.
திரும்ப மாவு ஜல்லடையில் சலித்தால் மாவு தனியாக வந்துவிடும்.
நொய்யை வெறும் வாணலியில் வாசம் வரும் வரை வறுத்து, வெய்யிலில் காயவைத்து டப்பாவில் சேமித்து வைத்தால், மாதக்கணக்கில் இருக்கும்.
மாவை வறுத்து காய வைத்து வைத்தால் இடியாப்பம் செய்ய பயன்படுத்தலாம்.
புட்டு தயாரிக்க:-
துவரம் பருப்பை அரைமணி நேரம் ஊற வைக்கவும்.
உப்பை சிறிது தண்ணீரில் கரைத்து, நொய்யில் தெளித்து பிசறவும்.
கையில் கொழுக்கட்டையாக பிடித்தால், நிற்கும் அளவுக்கு தண்ணீர் தெளித்தால் போதும். தேங்காயை துருவி வைக்கவும். முந்திரியை நெய்யில் வறுத்து வைக்கவும்.
இட்லி தட்டில் துணி போட்டு, மாவை பரப்பி வைத்து, அதன் மீது ஊற வைத்த துவரம் பருப்பை தண்ணீரை வடித்து போட்டு மூடி வேக வைக்கவும்.
வெந்ததும் தட்டில் கொட்டி உதிரியாக்கவும்.
வெல்லத்தை ஒரு கை தண்ணீர் தெளித்து (கரைந்ததும், வடிகட்டி) பாகு வைக்கவும்.
சளசளப்பாக கொதிக்கும் போது, தேங்காய் துருவல், முந்திரி, நெய், ஏலக்காயை பொடி செய்து சேர்த்து, வேக வைத்த மாவையும் சேர்த்து கிளறி இறக்கவும்.
இளகினாற் போல் இருந்தாலும் அரைமணி நேரம் கழித்து பார்த்தால் உதிர் உதிராக வந்துவிடும்.