குரக்கன் ரவை உப்புமா
தேவையான பொருட்கள்:
குரக்கன் (கேழ்வரகு அல்லது ராகி) ரவை - 1 கப்
கத்தரிக்காய் - 1
தக்காளி - 1
வெட்டிய வெங்காயம் - 1/4 கப்
வெட்டிய புரோக்லி - 1/2 கப்
துருவிய கரட் - 1/4 கப்
தக்காளி பேஸ்ட் - 1 தேக்கரண்டி
பால் - 1 கப்
கறிவேப்பிலை - 2 நெட்டு
செத்தல் (உலர்ந்த) மிளகாய் - 5 அல்லது 6
பெரிய சீரகம் (சோம்பு) - 1 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 2 சிட்டிகை
எண்ணெய் - 5 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
தேவையானப் பொருட்களை தயாராய் எடுத்து வைக்கவும். கத்தரிக்காயை மெல்லிய துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
கேரட்டை துருவி எடுத்துக் கொள்ளவும். ப்ரோக்கலியை துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும். புரோக்லியை உப்பு சேர்த்து தண்ணீர் விடாது மைக்ரோவேவில் 4 நிமிடங்கள் வைத்து அவித்து எடுக்கவும்.
மெல்லியதாக வெட்டி வைத்துள்ள கத்தரிக்காய் துண்டங்களுடன் உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து பிரட்டி வைக்கவும்.
குரக்கன் (கேழ்வரகு/ராகி) ரவையை வறுத்து வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, சீரகம் போட்டு தாளித்து பின்னர் நறுக்கின வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
அதில் வெட்டி வைத்த கத்தரிக்காய் துண்டங்களை சேர்த்து நன்றாக வதக்கவும்.
பின்னர் சிறிது உப்பு சேர்த்து, துருவின காரட் சேர்த்து வதக்கவும்.
அத்துடன் அவித்த புரோக்லியை சேர்த்து 2 நிமிடங்களுக்கு வதக்கவும். கலவை நன்கு வதங்கியதும் இறக்கி ஒரு பாத்திரத்தில் கொட்டி வைக்கவும்.
காய்கள் வதக்கிய அதே பாத்திரத்தில் பால், 1/4 கப் தண்ணீர், உப்பு, தக்காளி, தக்காளி பேஸ்ட், செத்தல் மிளகாய் சேர்த்து கொதிக்க விடவும். (பால் திரியாமல் கரண்டியால் அடிக்கடி துளாவவும்)
தக்காளி அவிந்ததும் அதில் வறுத்த ரவையை சிறிது சிறிதாக கொட்டி கிளறவும்.
ரவை அவிந்ததும் அதனுள் வதக்கிய மரக்கறி கலவையை கொட்டி அகப்பை காம்பால் கிளறி இறக்கவும்.