ஊத்தாப்ப சாண்ட்விச்

on on on on on 1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

இட்லி அரிசி - 1 கப்

வெள்ளை உளுந்து - 1/4 கப் (நான்கில் ஒரு பங்கு)

வெந்தயம் - 2 தேக்கரண்டி

கேரட் - 2

பெரிய வெங்காயம் - 2

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும். அரிசி மற்றும் உளுந்தை மூன்று மணி நேரம் ஊற வைக்கவும். (அரிசியைத் தனியாகவும், உளுந்துடன் வெந்தயத்தைச் சேர்த்தும் ஊற வைக்கவும்).

ஊறியதும் அரிசி மற்றும் உளுந்தை நன்கு அரைத்துக் கொள்ளவும். அத்துடன் மிதமாக உப்பு சேர்த்து கலந்து அரை மணி நேரம் அப்படியே வைத்திருக்கவும். கேரட்டை துருவிக் கொள்ளவும். பெரிய வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.

அரை மணி நேரம் கழித்து தோசைக்கல்லை காயவிட்டு அரைத்த மாவை எடுத்து சிறு சிறு வட்டங்களாக மூன்று ஊத்தாப்பங்களை ஊற்றவும். அதில் இரண்டு ஊத்தாப்பங்களின் மீது துருவிய கேரட்டையும், ஒன்றில் நறுக்கிய வெங்காயத்தையும் தூவி எண்ணெய் விட்டு மூடி வேக வைக்கவும். பிறகு திருப்பிப் போட்டு வேகவிட்டு எடுக்கவும்.

முதலில் கேரட் தூவிய ஊத்தாப்பத்தை வைத்து, அதன் மேல் வெங்காயம் தூவிய ஊத்தாப்பத்தை வைக்கவும். அதற்கும் மேல் கேரட் தூவிய ஊத்தாப்பத்தை வைத்து மெதுவாக அழுத்தவும்.

கத்தியை தண்ணீரில் நனைத்துக் கொண்டு அடுக்கி வைத்துள்ள ஊத்தாப்பத்தை துண்டுகள் போட்டு பரிமாறவும்.

குறிப்புகள்:

இதில் கேரட்டிற்கு பதிலாக பனீர் கூட சேர்க்கலாம். (அல்லது) விருப்பமான காய்கள் சேர்த்தும் செய்யலாம்.