இட்லி உப்புமா (3)

on on on on on 1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

இட்லி - 10

பெரிய வெங்காயம் - 1

மிளகாய் வற்றல் - 6

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

பெருங்காயத் தூள் - 1/4 தேக்கரண்டி

தனியா - 1/2 மேசைக்கரண்டி

பூண்டு - 1 பல்

சின்ன வெங்காயம் - 10

கறிவேப்பிலை - ஒரு கொத்து

கடுகு - 1/2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

இட்லியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். மிளகாய் வற்றலை இரண்டாக கிள்ளி வைத்துக் கொள்ளவும். பெரிய வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். சின்ன வெங்காயம், பூண்டு இரண்டையும் தோல் உரித்து வைத்துக் கொள்ளவும்.

மிக்ஸியில் சின்ன வெங்காயம், இரண்டாக கிள்ளிய மிளகாய் வற்றல், தனியா, பூண்டு போட்டு ஒன்றிரண்டாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

வாணலியில் 2 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். அதனுடன் நறுக்கின பெரிய வெங்காயம், மஞ்சள் தூள் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் அதில் 4 மேசைக்கரண்டி தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு அதிக தீயில் வைத்து நுரைத்து வரும் வரை 3 நிமிடம் கொதிக்க விடவும்.

பின்னர் அதனுடன் அரைத்து வைத்திருக்கும் மசாலா விழுதை போட்டு ஒரு நிமிடம் நன்கு கிளறி விடவும். கலவை கெட்டியாகி மிளகாய் வாடை போகும் வரை கிளறி விடவும்.

பிறகு அதில் துண்டுகளாக நறுக்கி வைத்திருக்கும் இட்லியை போட்டு இட்லியில் எல்லா மசாலாவும் சேரும்படி நன்கு ஒன்றாக கிளறி 2 நிமிடம் கழித்து இறக்கி வைத்து விடவும்.

எளிதில் செய்ய கூடிய இட்லி உப்புமா தயார். பரிமாறும் பொழுது மேலே கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

குறிப்புகள்: