இடியாப்பம் கார அடை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

இடியாப்பம் - 3

முட்டை - 1

வெங்காயம் - 1

கேரட், பீன்ஸ், முட்டைகோஸ், உருளைகிழங்கு, சிகப்பு, ஆரஞ்சு, குடைமிளகாய் - இவையெல்லாம் சேர்ந்து 1 கப்

இஞ்சி, பூண்டு விழுது - 1/2 தேக்கரண்டி

மிளகாய்த்தூள் - 1 1/2 தேக்கரண்டி

கறி மசாலாத்தூள் - 1/2 தேக்கரண்டி

சோம்புத்தூள் - 1/2 தேக்கரண்டி

மல்லிதழை - சிறிதளவு

எண்ணெய் - 2 தேக்கரண்டி மற்றும் சுடுவதற்க்கு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

இங்கே சொல்லியிருக்கும் காய்களெல்லாம் ஒரே அளவாக எடுத்து கொண்டு அவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தையும் பொடிதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து இரண்டு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடு வந்ததும், நறுக்கி வைத்திருக்கும் அனைத்து காய்களையும் போட்டு அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து மிதமான தீயிலேயே நன்கு வதக்க வேண்டும்.

வதங்கியதும், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி விட்டு தூள் வகைகளை சேர்த்து மூன்று நிமிடம் பச்சை வாசனை போக வதக்கவும்.பின்பு மல்லிதழையை கழுவி விட்டு பொடியாக நறுக்கி தூவி ஒரு வதக்கு வதக்கி இறக்கி விடவும்.

ஒரு அகலமான பாத்திரத்தில் இடியாப்பத்தோடு, முட்டை, வதக்கிய காய்களை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.(முட்டை சிறியதாக இருந்தால் இன்னும் ஒன்றை சேர்த்து கொள்ளலாம்.)

தோசை தவாவை அடுப்பில் வைத்து சூடு வந்ததும் சிறிது எண்ணெய் தடவி விட்டு கை நிறைய கலந்து வைத்திருக்கும் கலவையிலிருந்து எடுத்து உருட்டி மெதுவாக தவாவில் தட்டவும். மொத்தமாகவும் இல்லாமல் திட்டமாக இருக்கும்படி சமப்படுத்தவும்.

பின்பு அதை சுற்றி ஒரு தேக்கரண்டி நிறைய எண்ணெய் ஊற்றி குறைந்த தீயிலேயே நன்கு அடி சிவக்கும் வரை விடவும். அடி சிவந்ததும் மெதுவாக திருப்பி போட்டு இன்னும் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சுற்றிலும் ஊற்றவும்.

இரண்டு பக்கமும் சிவந்து ஓரமெல்லாம் மொறு மொறுவென்று இருக்கும். சுட சுட எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்:

இதையே ரைஸ் வெர்மிஸிலியிலும் செய்யலாம். ரைஸ் வெர்மிஸிலியை நன்கு கொதிநீரில் போட்டு பதினைந்து நிமிடம் வைத்து விட்டு பின்பு நன்கு தண்ணீர் இல்லாமல் வடிக்கட்டி விட்டு பாத்திரத்தில் போட்டு இதர சாமான்களை சேர்த்து நன்கு பிசைந்து சுடலாம்.

மாலை நேர சிற்றூண்டியாகவும் சாப்பிடலாம்.

லன்ச் பாக்ஸிற்கும் கொடுத்து அனுப்ப ஏதுவாக இருக்கும்.