வேர்க்கடலை சாம்பார்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

துவரம் பருப்பு - ஒரு ஆழாக்கு

கலந்த மிளகாய்த் தூள் - 3 மேசைக்கரண்டி

பெருங்காயம் - சிறு நெல்லிக்காய் அளவு

பூண்டு - 6 பல்

சீரகம் - 1 தேக்கரண்டி

வெந்தயம் - 1/2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

முருங்கைக்காய் - 3

முள்ளங்கி - 1/4 கிலோ

பெரிய வெங்காயம் - 1

தக்காளி - 1

பச்சை மிளகாய் - 5

வேர்க்கடலை - 1/4 கப்

புளி - சிறு எலுமிச்சை அளவு

கடுகு - 1 தேக்கரண்டி

கறிவேப்பிலை - ஒரு கொத்து

மிளகாய் வற்றல் - 3

எண்ணெய் - 1 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். முருங்கைக்காயை ஒன்றரை அங்குலத் துண்டுகளாக நறுக்கவும். முள்ளங்கியை வட்டமாக நறுக்கவும். தக்காளியைத் துண்டங்களாக நறுக்கி வைக்கவும்.

புளியில் தண்ணீர் ஊற்றி கரைத்து ஒரு கப் எடுத்துக் கொள்ளவும். தேவையான இதரப் பொருட்களைத் தயாராய் வைக்கவும்.

ஒரு பானில், பருப்புடன் அரைத் தேக்கரண்டி சீரகம், கால் தேக்கரண்டி வெந்தயம், மஞ்சள் தூள், பெருங்காயம், பூண்டு சேர்த்து நன்கு குழைய வேக வைக்கவும்.

வேக வைத்த பருப்புடன் மிளகாய் தூள், உப்பு சேர்க்கவும்.

பின்னர் நறுக்கின முருங்கைக்காய், தக்காளி, வெங்காயம், முள்ளங்கி மற்றும் நிலக்கடலை சேர்க்கவும்.

அதில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றவும். காய்கள் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் இருக்க வேண்டும்.

பிறகு ப்ரஷர் பானை மூடி வைத்து சுமார் 20 நிமிடங்கள் வேக விடவும்.

அதன் பின்னர் திறந்து, கரைத்து வைத்துள்ள புளி கரைசலை ஊற்றவும். இப்போது திறந்து வைத்தே சுமார் மூன்று நிமிடங்கள் கொதிக்க விடவும்.

ஒரு வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி, கடுகு அரை தேக்கரண்டி,சீரகம் கால் தேக்கரண்டி, கறிவேப்பிலை, மிளகாய் வற்றல் போட்டு தாளிக்கவும்.

தாளித்தவற்றை சாம்பாரில் ஊற்றவுன். சிறிது கொத்தமல்லித் தழையை மேலே தூவி பரிமாறவும்.

குறிப்புகள்:

பொடியில் வெந்தயம் சேர்ப்பதனால் சாம்பாரில் பருப்பின் அளவை சற்றுக் குறைவாக சேர்க்கலாம். சாம்பார் திக்காக இருக்கும்.